திருக்கோயில் விஷயங்களில் தமிழக அரசு தலையிடாமல் இருப்பது நல்லது என பாஜக மாநில செயலாளர் டால்ஃபின் பா.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய மாநில அரசு ஹிந்து கோயில்கள், ஆதீனங்கள், மடங்கள் என்று வரிசை கட்டி வேட்டையாடத் தொடங்கி இருக்கிறதோ என்று ஆன்மிக அன்பர்கள் ஐயப் படும் வகையில் இந்த திமுக அரசின் அன்றாட செயல்பாடுகள் அமைகின்றன.
திருக்கோயில்களில் முறைப்படி நடைபெற வேண்டிய பூஜைகளை, திருவிழாக்களை வேறு தேதிகளுக்குத் தள்ளி வைப்பதும், உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொல்லி அவற்றை நடத்த விடாமல் தடுப்பதும் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருக்கோவில்களின் கும்பாபிஷேகத் தேதிகளை மாற்றி அமைப்பதும் மக்கள் நலனுக்குக் கேடு தரும்.
இத்தகைய கேடுகளை காலங்காலமாக அறநிலையத் துறையின் பெயரிலே ஆட்சியாளர்கள் செய்து வருகிறீர்கள். மாநிலம் முழுவதும் திருக்கோயில்களில் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதான ஒரு விஷயத்தை தங்கள் வசதிக்கு ஏற்றபடி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அறிவிப்பு கொடுத்து புதிய குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறீர்கள். தவிரவும் பெண்களும் அர்ச்சகராகலாம் என்று சொல்வது புதிதாக பொறுப்பேற்ற மாநில அமைச்சர்களின், ஆட்சியாளர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.
ஹிந்து தர்ம ஆசார அனுஷ்டானங்களுக்கு உட்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், ஜீயர்கள் மடாதிபதிகள், ஆதீனங்கள் என எந்தவொரு பொறுப்பு பதவி பட்டம் எதிலும் தலையிட தமிழக அரசுக்குப் பாத்தியதை கிடையாது. திருக்கோயில்கள் நிர்வாகத்தை மட்டுமே கவனிக்க வந்ததாகச் சொல்லி அதன் பிறகு ஆகம விதிகளில் குறுக்கீடு செய்யும் தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டிய சரியான கால கட்டம் இதுதான்.
ஹிந்து தர்ம ஆச்சார்யார்கள், பெரியோர்கள், பக்த கோடிகள், ஆன்மீக அன்பர்கள் உடன் இணைந்து நாங்கள் (RSS – சங்க பரிவார் அமைப்புகள்) பல காலமாகக் கோரிக்கை வைத்த படி அறவோர் வாரியம் ஒன்றைப் புதிதாக அமைத்து திருக்கோயில்களின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். என பாஜக மாநில செயலாளர் டால்ஃபின் பா.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.