“மாநில அரசின் கல்வி உரிமைகளை பறித்து மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் புதிய கல்வி கொள்கை திட்டத்தின் அறிவிப்பில் தமிழைப் புறக்கணித்துள்ளதாக பாஜக அரசுக்கு கடும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
மாநில அரசின் கல்வி உரிமைகளை முழுமையாகப் பறித்து, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சமவாய்ப்பற்ற புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து கல்வியாளர்கள் எதிர்ப்பும் எச்சரிக்கையும் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிரான இந்தப் புதிய கல்விக் கொள்கை இந்தி – சமஸ்கிருத ஆதிக்கத்திற்கும் வழிவகுப்பதால், இக்கொள்கையைத் தொடக்கத்தில் இருந்தே கழகம் எதிர்த்து வந்துள்ளது.
இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிப்பதுடன், மாநில உரிமை – மொழி உணர்வு – மாணவர் எதிர்காலம் இவற்றுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.