அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! மாத இறுதிக்குள் வழங்கப்படுகிறது.!

0
Follow on Google News

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ், ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விதமாக, 9 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிப்பதாவது. ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டம், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால் சீரியமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்கள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 55,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விதமாக, முதலமைச்சர் 9 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களின் தலைமையில், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 45,000 வீட்டுமனைப் பட்டாக்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும். ஆக மொத்தம், ஒரு லட்சம் தகுதியான ஏழை, எளிய வீட்டுமனையற்ற பயனாளிகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்று பயனடைவர். இதன்மூலம், பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களில், வருவாய் ஆவணங்களில் நிலவகைபாடு மாற்றம் மற்றும் பெயர் மாறுதல் தொடர்பான பதிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, உட்பிரிவுகள் செய்யப்பட வேண்டிய நேர்வுகளில் உட்பிரிவு செய்து, தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் அனைவரும் சிரமமின்றி தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இலவச வீட்டுமனைப் பட்டாவினை தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் நிலத்தின் தன்மை, உரிமையாளர் குறித்த அனைத்து விவரங்களும் உறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.