தி.மு.க.வின் அடக்குமுறையை கண்டு அதிமுக அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில். அதிமுகவை மிரட்டி பணிய வைக்க தி.மு.க முயல்கிறது. தாயில்லா பிள்ளையாக இருக்கும் அதிமுகவில் இரண்டு எளிய தொண்டர்கள் தலைவர்களாக இருந்து கட்சியை வழிநடத்தி கொண்டிருக் கிறார்கள். இந்த இயக்கத்தை உடைத்து விடலாம் என்ற நோக்கில் அச்சுறுத்தலை தி.மு.க ஏவி விடுகிறது.
அதற்காக தாங்கள் வைத்திருக்கிற போலீசாரை வைத்து தடியடி பிரயோகம் நடத்துவதை போல லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகின்றனர். இந்த சலசலப்புக்கெல்லாம் கழகம் அஞ்சப் போவதில்லை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கிலும் சட்டப்படியே தானே தி.மு.க செயல்படுகிறது? என்றோம். அவர் சட்டப்படியாக அந்த வழக்கை சந்திப்பார். தன் மீதான நியாயத்தை அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைப்பார்.
1996-ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க, இதேபோல் ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டது.அப்போது தந்தை இருந்தார். இப்போது மகன் இருக்கிறார். ஆனால், பழிவாங்கும் நடவடிக்கையில் தந்தைக்கும் மகனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 2016 முதல் 2021 வரையில் ஆட்சி செய்த நாங்கள், யார் மீதும் பழி பாவத்தை ஏவி விட்டதில்லை. அப்போது, யார் மீதும் வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பவில்லை.
இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் நடப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுபோன்ற அச்சுறுத்தலை கருணாநிதி தொடங்கி வைத்தார். அதனை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். அனைத்து கட்சியையும் அழைத்து ஆலோசனை கேட்பது, மற்ற கட்சிகளை ஒடுக்க நினைப்பது போன்றவை என்ன மாதிரியான அரசியல் என்பதை ஸ்டாலின் தான் விளக்க வேண்டும். பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிக்கிறவர்கள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். உப்பு தூவும் போது உடலில் காயம் இருந்தால் தான் எரியும். இல்லையென்றால் உப்பு காணாமல் போய் விடும். அதைத்தான் தி.மு.கவுக்கு சொல்ல விரும்புகிறோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.