ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) கூட்டு முயற்சியில் உருவாக்கிய வான் இலக்கை தாக்கும் தொலை தூர ஏவுகணைகள் (Long Range Surface to Air Missiles (LRSAM)), ஐதராபாத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்திலிருந்து, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. கடற்படை பயன்பாட்டுக்காக மேற் பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளை டிஆர்டிஓ, இஸ்ரேல் நாட்டின் ஐஏஐ நிறுவனம் உட்பட பல நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது.
இந்திய கடற்படையின் சமீபத்திய போர்க்கப்பல்களில் இருந்து, எதிரி நாட்டு போர் விமானம் உட்பட வான் இலக்குகளை தாக்கும் விதத்தில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மோட்டார்கள், இலக்கை கண்டுபிடித்து அழிக்கும் ரேடியோ அதிர்வலை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள், இந்திய போர்கப்பல்களில் பல கட்ட சோதனைகளை முடித்து விட்டன.
இதையடுத்து, டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு வடிவமைப்பு இயந்திர நிறுவனத்தின் (Defence Machine Design Establishment ( DMDE)). இயக்குனர் ரியர் அட்மிரல் வி.ராஜசேகர் முன்னிலையில் இந்த ஏவுகணைகள், கடற்படை பயன்பாட்டுக்காக நேற்று ஐதராபத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் வகையில், இந்த ஏவுகணைகளை வெற்றிகரமாக தயாரித்ததற்காக, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் டிஆர்டிஓ தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஏவுகணைகளின் உற்பத்தி ஆர்டரை வெற்றிகரமாக நிறைவு செய்ய டிஆர்டிஓ எடுத்த முயற்சிகளை ரியர் அட்மிரல் வி.ராஜசோகர் பாராட்டினார். இதேபோல், எதிர்கால பயன்பாட்டுக்கான நவீன ஆயுதங்களையும் டிஆர்டிஓ உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.