கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது. திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளுடன், முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்திலிருந்து, மும்பைக்கு இன்று இரவு புறப்படுகிறது. திரவ மருத்துவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள், , இந்திய ரயில்வேயின் சமதள சரக்கு வேகன்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றன.
உத்தரப் பிரசேதத்தின் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்திசெய்வதற்காக மற்றொரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், லக்னோவிலிருந்து பகோராவுக்கு, வாரணாசி வழியாக புறப்பட்டது. இந்த ரயில் பயணத்துக்காக லக்னோவிலிருந்து, வாரணாசி வரை பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டது. 270 கி.மீ தூரத்தை மணிக்கு சராசரியாக 62.35 கி.மீ வேகத்தில் இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்தது.
ஆக்ஸிஜனை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, தரை வழி போக்குவரத்தை விட, ரயில் மூலம் வேகமாக கொண்டுச் செல்ல முடியும். ரயில்களால் 24 மணி நேரமும் இயங்க முடியும். ஆனால் டேங்கர் லாரி டிரைவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை, சமதள சரக்கு வேகன்களில் ஏற்றி இறக்குவதற்கு சாய்தள பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரயில் பாதையின் குறுக்கே உள்ள சாலைப் பாலங்கள் மற்றும் ரயில்பாதை மின் கம்பிகளை உரசாத வகையில், 3320 எம்எம் உயரமுள்ள டி1618 ரக டேங்கர் லாரிகள், சரக்கு ரயிலின் சமதள வேகன்களில் கொண்டு செல்வதற்கு சாத்தியமானது என பல கட்ட சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது. கடந்தாண்டு ஊரடங்கு காலத்திலும், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்று, தானிய விநியோக சங்கிலியை ரயில்வே நிலையாக வைத்திருந்தது குறிப்பிடதக்கது.