2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார் அதில், தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.
இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 1,18,101 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம். இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும். நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும். 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.