நேற்றைய மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது. நண்பர்களே, பிஹாரின் மதுபனியிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மதுபனியில் டாக்டர்ராஜேந்திரபிரசாத் விவசாயப் பல்கலைக்கழகமும், அங்கே இருக்கும் வட்டார விவசாய விஞ்ஞான மையமும் இணைந்து ஒரு நல்ல முயல்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்கிறது, தவிர இதனால் தூய்மை பாரத இயக்கத்துக்கும் புதியதொரு சக்தியும் கிடைக்கிறது.
பல்கலைக்கழகத்தின் இந்த முன்னெடுப்பின் பெயர் சுகேத் மாடல். அதாவது நல்வேளாண் மாதிரி. இதன் நோக்கம் என்னவென்றால், கிராமங்களில் மாசு உண்டாவதைக் குறைப்பது. இந்த மாதிரியின்படி, கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து பசுஞ்சாணம் மற்றும் வயல்கள்-வீடுகளிலிருந்து வெளிப்படும் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இதற்கு ஈடாக கிராமமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம் கொடுக்கப்படுகிறது.
திரட்டப்படும் கிராமப்பகுதிக் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றும் பணியும் செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த நல்வேளாண்மாதிரியால் நான்கு ஆதாயங்கள் நம் நேரடிப் பார்வைக்குப் புலப்படுகின்றன. ஒன்று, கிராமங்கள் மாசடையாமல் இருத்தல், இரண்டாவது, குப்பைகளிலிருந்து விடுதலை, மூன்றாவது, கிராமவாசிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பணம், நான்காவதாக, கிராமங்களின் விவசாயிகளுக்கு இயற்கை உரம். நீங்களே சிந்தியுங்கள், இதுபோன்ற முயற்சிகள் நமது ஊரகப்பகுதிகளின் சக்தியை எத்தனை அதிகரிக்கமுடியும்!! இதுதான் தற்சார்பு.
நான் தேசத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்திடத்திலும் என்ன கூறுகிறேன் என்றால், நீங்களும் இதுபோல உங்கள் தரப்பில் செய்யத் தலைப்படுங்கள். மேலும் நண்பர்களே, நாம் ஒரு இலக்கை மனதில் தாங்கிப் பயணிக்கும் போது, கண்டிப்பாக நல்ல விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். நமது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் காஞ்ஜீரங்கால் பஞ்சாயத்தையே எடுத்துக் கொள்வோமே! இந்தச் சிறிய பஞ்சாயத்து என்ன செய்திருக்கிறது, நீங்களே பாருங்கள். கழிவிலிருந்து செல்வம் என்பதற்கான மேலும் ஒரு மாதிரி இங்கே உங்களுக்குக் கிடைக்கும்.
இங்கே, கிராமப்பஞ்சாயத்து, உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓர் உள்ளூர் செயல்திட்டத்தினை அமல் செய்திருக்கிறது. கிராமம் முழுவதிலிருந்தும் குப்பைகள் திரட்டப்படுகின்றன, இதீலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதம் தங்கும் பொருட்கள் கிருமிநாசினியாக விற்பனை செய்யப்படுகின்றன. கிராமத்தின் இந்த மின்னாலையின் திறன் ஒவ்வொரு நாளும் 2 டன்கள் குப்பைகளைப் பதப்படுத்துகிறது.
இதனால் உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் தெருவிளக்குகளுக்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் பயனாகிறது. இதனால் பஞ்சாயத்தின் பணம் மிச்சமாவதோடு, இந்தப் பணம் வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. இப்போது நீங்களே சொல்லுங்கள், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சின்ன பஞ்சாயத்து, ஒன்றை செய்து காட்டவேண்டும் என்ற கருத்தூக்கத்தை நம்மனைவருக்கும் அளிக்கிறது இல்லையா? அருமையாகச் செய்து காட்டியிருக்கிறார்கள் இவர்கள்!