நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த போதை மாத்திரைகள்.! சுங்கத் துறையினரால் பறிமுதல்..!

0
Follow on Google News

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் எம்எம்டிஏ என்று சந்தேகப் படக்கூடிய சாம்பல் வண்ண போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 60 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

ரீப்பர் என்றழைக்கப்படும், மண்டை ஓட்டு முத்திரை கொண்ட இந்த மாத்திரைகளில் 350 மில்லிகிராம் எம்எம்டிஏ இருந்தது. இது மிகவும் அதிக அளவாகும். இரண்டாவது பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் எம்எம்டிஏ என்று சந்தேகப் படக்கூடிய பச்சை வண்ண போதை மாத்திரைகள் இருந்தன. மொத்தம் 40 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

சிகப்பு காளை என்றழைக்கப்படும், காளை முத்திரை கொண்ட இந்த மாத்திரைகளில் 225 மில்லிகிராம் எம்எம்டிஏ இருந்தது. ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள மொத்தம் நூறு மாத்திரைகள் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருக்கும் இரண்டு தனிநபர்களின் பெயர்களுக்கு நெதர்லாந்திலிருந்து இந்தப் பொட்டலங்கள் வந்தன. விசாரணையின் போது அதில் அளிக்கப்பட்டிருந்த முகவரிகள் போலியானவை என்பது தெரியவந்தது.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர், செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.