பழைய நினைவுகள் பற்றி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் அதில், அரசு மருத்துவராக இருந்த போது நடத்த சம்பவங்களை பற்றி கூறிய போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த நான் 1967-ஆம் ஆண்டு முதல் 1971-ஆம் ஆண்டு வரை அரசு மருத்துவராக பணியாற்றினேன். திண்டிவனம் தாலுகா அரசு மருத்துவமனையில் தான் பணி.
திண்டிவனம் தாலுகா மருத்துவமனையில் என்னையும் சேர்த்து மொத்தம் 3 மருத்துவர்கள் பணியாற்றினோம். மூவரும் அனைத்து நாட்களும் பணியாற்ற வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு மருத்துவர் முழுநேரப் பணியாற்ற வேண்டும். முழுநேரப் பணி என்பது 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக வருவோருக்கு பணி செய்வது ஆகும். அது முழு மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலம்.
மதுக்கடைகள் எதுவுமே இல்லாத சூழலில், எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அப்போது எவரேனும் குடித்து விட்டு நடமாடினால், அவர்களை பிடிக்கும் காவலர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து வாருவார்கள். அவர்களை சோதித்து குடித்திருப்பதாக சான்றிதழ் வழங்கும்படி கோருவார்கள். மது அருந்தியிருப்பவர்களை சோதிக்க இப்போது உள்ளது போன்ற கருவிகள் அப்போது இல்லை.
எவரேனும் குடித்திருந்தால் அவர்களை வாயை ஊதும்படி கூறி, மதுவின் நாற்றத்தை வைத்து தான் அவர்கள் மது அருந்திருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய முடியும். அதன்படி மது அருந்தி விட்டு வந்தவர்களை எதிரில் அமரவைத்து ‘‘ வாயை ஊது… வாயை ஊது’’ என்று கூறுவேன். அவர்களும் வாயை ஊதுவார்கள். அப்போது மதுவின் நாற்றம் பயங்கரமாக அடிக்கும். அதை வைத்து அவர்கள் குடித்து இருந்ததற்கான சான்றிதழ்களை வழங்கினேன் என அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் மருத்துவர் ராமதாஸ்.