தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக மருத்துவர் ராமதாஸ் வருத்தம்.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, வடமாவட்டங்களில் பாமகவை மலை போல் நம்பியிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆனால் தருமபுரி மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டத்தில் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இந்த கூட்டணி.

இந்நிலையில் மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம், பாமகவின் மக்கள் பணி தொடரும் என தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அக்கட்சி இடம் பெற்றிருந்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றை சரி செய்யவும்,

அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும். பா.ம.க கடந்த காலங்களைப் போன்று ஆக்கப்பூர்வமான கட்சியாக மக்கள் பணியைத் தொடரும். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அளித்த உழைப்பும், ஒத்துழைப்பும் இணையற்றவை.

இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.