”கொள்ளையர் கூட்டத்திடம் இருந்து கொள்கைவாதிகள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும்; கொத்தடிமைகளிடம் உள்ள ஆட்சி இலட்சியவாதிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசினார், மேலும் அவர் பேசியதாவது, சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கின்ற அந்த உணர்வோடு என்னை அழைத்திருக்கிறீர்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் இதில் பங்கேற்று இருக்கிறேன்.
நாம் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் – கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். என்னைச் சந்தித்து பேட்டி எடுக்கும் ஊடகங்களிடம், ‘தி.மு.க. கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி’ என்று சொல்லி வருகிறேன். ஆனால் எதிரணி என்பது ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்று சேர்ந்துள்ளது. அ.தி.மு.க. மூலமாக தமிழகத்தில் காலூன்றலாமா என்று கணக்குப் போடுகிறது பாரதீய ஜனதா கட்சி. பா.ஜ.க.வை கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலமாக தங்கள் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கலாம் என்று அ.தி.மு.க. நினைக்கிறது. அத்தகைய சுயநலக் கூட்டணி தான் அ.தி.மு.க. – பாஜக கூட்டணி.
கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கையால் பழனிசாமியின் கையையும், இன்னொரு கையால் பன்னீர்செல்வத்தின் கையையும் தூக்கிக் காட்டினார். பழனிசாமியின் கையும், பன்னீர்செல்வத்தின் கையும் ஊழல் கைகள்; ஊழல் கறைபடிந்த கைகள். அதைத் தூக்கிப் பிடிப்பதன் மூலமாக இவர்களது ஊழலுக்கு நானும் உடந்தை என்று காட்டுகிறார் பிரதமர். பிரதமர் மோடியின் ஒரு கை, காவி கை; இன்னொரு கை, கார்ப்பரேட் கை! காவி கையும் – கார்ப்பரேட்டு கையும் ஊழல் கைகளோடு தான் கை கோர்க்கும். அந்தக் காட்சியை தான் நாம் பார்த்தோம்!
நாம் உழைப்பாளர் கரங்கள், பாட்டாளிகளின் கரங்கள், தொழிலாளர்களின் கரங்கள், தோழர்களின் கரங்கள், உழவர்களின் கரங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு பாரதியார் பாட்டைச் சொன்னால் போதும் – அவ்வையார் பாட்டைச் சொன்னால் போதும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அவ்வை மூதாட்டி பாடிய பாடலின் பொருள் என்ன என்றால், ஒரு மன்னனின் உயர்வு எதில் அடங்கி இருக்கிறது என்றால் நிலம் செழிப்பதில் தான் அடங்கி இருக்கிறது என்றார் அவ்வை பாட்டி.
ஆனால் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அவர்கள், அவ்வையாரின் பாட்டைச் சொல்லலாமா? அதற்கான உண்மையான அர்த்தத்தில் ஆட்சி நடத்துகிறீர்களா? அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மோடி அரசு மனது வைத்தால்தான் வரும்; ஜப்பான் அரசு மனது வைத்தால் தான் வரும் என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள். பழனிசாமி அரசாங்கத்தை, ஒரு அரசாங்கமாகவே மத்திய பா.ஜ.க. மதிக்கவில்லை. இந்த நிலையில் நடக்க இருக்கும் தேர்தல் தமிழகத்தின் நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் முக்கியமான தேர்தல் என முக ஸ்டாலின் பேசினார்.