அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவளித்து வந்தால் மறு தரப்பினர் எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில், தந்தை பெரியாரின் இதயத்தில் முள்ளாய்த் தைத்தது ஆறியது. தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதிக்கான சட்டத்தை நிறைவேற்றினார்.ஆனால் அதை எதிர்த்து சாதிய சக்திகள் சமூக, அரசியல் மற்றும் சட்ட சிக்கல்கள் பலவற்றை உருவாக்கினார்கள்.இந்த சதி வேலைகளை எல்லாம் முறியடித்து பல்வேறு சாதிகளைச் சார்ந்த 58 பேருக்கு பணிநியமனம் அளித்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள்.
இந்த போராட்ட வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அமைச்சர் திரு. சேகர் பாபு, வழக்கறிஞர்கள், சமூகப்போராளிகள், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி என கனிமொழி எம்பி தெரிவித்திருந்த நிலையில், பாஜக கலை கலாச்சார மாநில தலைவி நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவீட்டர் பக்கத்தில், திருமதி. கனிமொழி எம்.பிக்கு .என் கேள்வி. அய்யா வைகுண்டர் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியுமா? உங்களால் இதை செய்ய முடியுமா?
அய்யா வைகுண்டர் கோவிலில் நாடார்களுக்கு பதிலாக யாராவது முழு மனதுடன் ஒற்றுமையாக வழிபாடு செய்து தங்கள் கடமையை செய்ய முடியுமா? கோவில் அறக்கட்டளையை வேறு யாருக்காவது கொடுப்பீர்களா? அய்யா வைகுண்டர் சமத்துவத்தை போதித்தார், நான் அவரை நம்புகிறேன், வணங்கி வருகிறேன். அய்யா வைகுண்டர் கோவில் மற்றும் அறக்கட்டளை நாடார்களுக்கு மட்டுமே. பல மக்கள் மற்றும் அனைத்து சாதியினரும் அய்யா வைகுண்டரிடம் செல்கின்றனர்.
அய்யா வைகுண்டர் கோவில் பல ஏழை இந்துக்களுக்கு உணவளிக்கிறது. நாடார் சமூகத்தை அழகாக மேம்படுத்துகிறது. அது அழகானது, அது தான் இந்து மதம். தயவுசெய்து இந்து பாரம்பரியத்தையும் பழக்க வழக்கங்களையும் கெடுக்காதீர்கள் என கனிமொழிக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.