கலைஞர் டிவியின் 15 ஆம் ஆண்டு விழாவில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வம் பகிர்ந்துள்ளார். அதில், கலைஞர் டிவி 15 ஆம் ஆண்டு விழாவிற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அலுவலம் வந்து எங்கள் MD இயக்குனர் அமிர்தம் அவர்களையும், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களையும் வாழ்த்தினர்.
முந்தைய நாள் இரவே காலை முதலமைச்சர் வருகிறார் என சொல்லிவிட்டார்கள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தோம். முதலமைச்சர் மேலே வந்து கேக் வெட்டி சிறப்பு செய்துவிட்டு சில தொழிலாளர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதே நேரத்தில் நான், திவ்யா, சுமையாவும் முதலமைச்சருடன் புகைப்படம் எடுக்கக் காத்திருந்தபோதே, அருகில் துரைமுருகன் ஐயா இருந்தார். நான் அவருடைய தீவிர விசிறியாக இருந்தாலும் கீழே அறிவாலயத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்.
ஆனால் தொந்தரவு செய்யக்கூடாது என பேசமாட்டேன். இது நம்ம இடமாச்சே அவரிடம் சென்று ஒரு போட்டோ எடுக்கனும் சார் என்றேன் “எடுத்துக்கோங்க” என்று அவர் ஸ்டைலில் சொன்னார். “நான் உங்க ஆர்மி சார்” என்றேன். அப்புடியா என உற்சாகமாக கேட்டுக் கொண்டே வேகமாக மாஸ்கை கலட்டிக்கொண்டார். உடன் இருந்த திவ்யா மற்றும் சுமையாவை பார்த்து “இவுங்களும் ஆர்மியா” என்றார். நான் பொறாமை பிடித்தவளாய் “அவுங்கெல்லாம் இல்ல சார் நான் மட்டும்தான்” என்றேன்.
சுமையாவும், திவ்யாவும் உங்க thug life நாங்களும் fansதான் சார் என்றனர். பொதுச்செயலாளர் ஆனதும் உங்க பழைய thug life பேச்சுக்களை ரொம்ப மிஸ் பண்றோம் என சொன்னதும் அப்படியொரு சிரிப்பு அவருடன் மாறி மாறி போட்டோ எடுத்ததில் முதலமைச்சர் கிளம்பத் தயாராகி எங்கள் அருகில் வந்து திரும்பிக்கொண்டிருந்த எங்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினார். அவ்வளவு அருகாமையில், நாம் விளையாட்டுத்தனமாய் ஏதோ செய்துகொண்டிருந்தவர்களுக்கும் வணக்கம் சொன்னதை பார்த்து ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
போட்டோ கேட்கக்கூட வாய் வரவில்லை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன், கடந்துவிட்டார். பின் எப்படியாவது புகைப்படம் எடுக்கலாம் என கீழே அவர் அறைக்கு வெளியே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரித்துவிட்டது. கதவு திறந்ததும் துரைமுருகன் ஐயா முதலில் வெளியே வந்தார், என்ன மறுபடியும் வந்துருக்கீங்க என்றார் முதலமைச்சருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றோம். “வராரு வராரு விடாதீங்க” என சிரித்துக் கொண்டே சொன்னார்.
ஆனால் அதீத கூட்டத்தில் இயலவில்லை என்பது சற்று வருத்தம்தான் என்றாலும் அன்றைய நாளில் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும், உற்சாகமும் கொடுத்தது துரைமுருகன் ஐயாதான். அவருடைய உடல்மொழியையும், பேச்சையும், சிரிப்பையும் ஆர்மி என்றவுடன் அவர் ஆன உற்சாகத்தையும் சொல்லிச் சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தோம். ஒருவருக்கு வயதாக வயதாக குழந்தைமையை அடைவார்கள் என்பார்கள், என் எழுத்தில் அவருடைய செயலை சரியாக வெளிப்படுத்தினேனா எனத் தெரியவில்லை, ஆனால் ஐயாவின் குழந்தைத்தன்மையை நாங்கள் கண்கூடாய் பார்த்தோம்,உணர்ந்தோம், மகிழ்ந்தோம்.