திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முதல்வர் உட்பட மாஜி அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின், அப்போதைய முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட எட்டு அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்களையும் அதற்கு ஆதாரங்களாக கருதப்படும் ஆவணங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து அளித்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முக ஸ்டாலின், நெடுஞ்சாலை துறை டெண்டர் எடப்பாடி பழனிசாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. உள்ளாட்சி துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை அமைச்சர் என்று தான் கூற வேண்டும்.
கொரோனா காலத்திலும் அந்த தொற்று நோயை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்க், விளக்குமாறு ஆகியவற்றில் பல கோடி கொள்ளையடித்துள்ளனர். அமைச்சர் வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட்டாகவும் ஊழல் செய்வார்கள்.அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா மக்களுக்கு தாராளமாக வினியோகம் செய்யும் சூழலை ஏற்படுத்தி போலீஸ் துணையுடன் கொள்ளையடித்தார்.
மேலும் தற்போது ஆட்சி முடியும் தருவாயிலும் 3000 முதல் 5000 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர்.. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். என முக ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக தேர்தலுக்கு முன்பு சொன்னது போன்று முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளுக்கான வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறது.
தலைமை செயலகத்தில் உள்ள பழைய கோப்புகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் வலுவான ஆதாரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மீது வழக்கு தொடுக்க திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார், அதில் சில முடுவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் விரைவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, திமுக அரசு தங்களை பழிவாங்கும் நோக்கில் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பொய்யான வழக்கு பதிவு செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதை ஆளுநர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரிடம் மனு கொடுக்க இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றனர்.