அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், எங்களை யாரும் நிர்ப்பந்தம் செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி அறிவித்துள்ளது, ஆனால் இது குறித்து கூட்டணி காட்சிகள் இதுவரை உறுதி செய்யவில்லை, மேலும் பாஜக தரப்பினர் கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இந்த அம்மா கிளினிக் மிகவும் உதவிகரமாக உள்ளது.தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணிகள் உறுதி செய்யப்படும். அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அந்த வகையில் தற்போது பல பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பிறகு தான் பொதுக்கூட்டம் நடைபெறும்.
கழகத்தின் பொதுக்கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி இதுவரை எங்களுடன் இருக்கிறார்கள். தேர்தலைப் பொறுத்தவரை களப்பணி, கட்சி பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கழகத்தை யாரும் நிர்ப்பந்தம் பண்ண முடியாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,
மேலும் கழகம் வலிமையான கட்சி, எவ்வளவோ பிரச்சினையை சந்தித்து உள்ளது. எனவே எந்த ஒரு தேசியக் கட்சியும் கழகத்தை அழிக்க முடியாது. கழகத்தை யாரும் அசைத்து பார்க்க முடியும் என்று நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள். கழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி. திமுக பதவி சுகத்துக்காக பணம் சுகத்துக்காக எதை வேணாலும் விட்டுக் கொடுப்பார்கள் என ஜெயக்குமார் கூறினார்.