திமுகவினர் செய்யும் அராஜகத்திற்கு கட்டப்பஞ்சாத்து செய்யும் தலைவர் நாட்டுக்குத் தேவையா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பேசியதாவது. திமுக என்றாலே அது ஒரு அராஜக கட்சி, ரவுடி கட்சி. தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பக்கத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு பெண்ணை தாக்குகிறார். அந்த பெண் கதறுகின்ற காட்சியை நாம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.
கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்ணிடம் திமுக ஒன்றிய செயலாளர் தவறாக நடக்க முயற்சிக்கின்றார். அந்த பெண், போலீஸில் புகார் செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, இன்றைக்கு அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளனர். சென்னையில் ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். தப்பு செய்கின்றவரை தட்டிக்கேட்டால் அவர் உண்மையான தலைவர். கட்டப்பஞ்சாயத்து செய்கின்ற தலைவர் நாட்டுக்குத் தேவையா?
இந்தியா டுடே என்ற இதழ் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிகாப்பதில் சிறந்த மாநிலம் எது என ஆய்வு செய்து, தமிழகம் தான் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்ற விருதினை வழங்கியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருகிறது, நான் உங்களில் ஒருவனாக இருக்கின்றேன், சட்டத்தின் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது, அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல். இந்த தேர்தலில் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக கழகத்தில் தான் பெண்களைக் கொண்ட பூத் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும், எந்த கட்சியிலும் கிடையாது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி கழகம். ஒவ்வொரு பூத்திற்கு பெண்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அரசுக்கும் மக்களுக்கு பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அனைவரும் உங்களை முழுவதுமாக இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தலா 10 ஓட்டாவது சேகரிக்க வேண்டும். முழுமையாக பணியாற்றிங்கள் மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். அதே போல, இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள பெண்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.