2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்யத் செய்தார்,அதில் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன, புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள். அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம். தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது. ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம். வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம். நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்க திட்டம். 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.
கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது. பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம். பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு