மதுரை சிம்மக்கல் பகுதியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை அருகில் கருணாநிதி சிலை திறக்க பாஜக சார்பில் ஆட்சேபணை தெரிவித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார், மதுரை சிம்மக்கல் பகுதி ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இருப்பதால், கருணாநிதி சிலை அமைக்கப்பட்டால் அப்பகுதி திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்சி அலுவலகம் போல் செயல்படும் என்பதால் அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்படும் என அப்பகுதி மக்கள் ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேராசிரியர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது, மதுரை சிம்மக்கல் பகுதியில் கப்பலோட்டிய தமிழன் திரு வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிலைக்கு பின் பக்கம், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை வைப்பதற்கு திமுக முயற்சி செய்து வருகிறது. பாரதிய ஜனதாகட்சிக்கு அங்கே கருணாநிதியின் சிலை வைப்பதில் இரண்டு விதங்களில் ஆட்சேபனை இருக்கிறது,
அதில் முதலாவது, சிம்மக்கல் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி; அங்கே ஓர் அரசியல்
தலைவரின் சிலை வைக்கப்படும் பொழுது, அந்த அரசியல் தலைவரின் சிலையை மையமாக
வைத்து, அது அந்த கட்சியின் களப்பணியாற்றும் இடமாக மாறிவிடும். இது பொதுமக்களுக்கு மிகுந்த
சிரமங்களை ஏற்படுத்தும்.
இரண்டாவது, அந்தவளாகம் வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்களது நினைவாக “வ உ சி நினைவு ப்பூங்கா என்று மதுரை மாநகராட்சியில் அறிவிக்கப்பட வேண்டும்; மதுரை மாநகராட்சி அதை பராமரிக்க வேண்டும்.
அந்த வளாகத்திற்குள் புதிதாக ஒரு சிலையை வைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அப்படி
வைத்தால் அது வ உ சி அவர்களுக்கு புகழ் சேர்ப்பதாக இருக்காது.
கருணாநிதி அவர்களது சிலையை மதுரையில் வேறு இடங்களில் வைக்க எங்களுக்கு ஆட்சேபணை
இல்லை; ஆனால் ஐயா பசும்பொன்தேவர், ஐயா உ சி அவர்கள் போன்ற மிகப்பெரும் தலைவர்களுக்கு, தியாகிகளுக்கு அருகாமையில் கருணாநிதியின் சிலையை வைப்பது, அந்த தலைவர்களுக்கு புகழ் சேர்க்காது என்பதால், நாங்கள் ஆட்சேபனை செய்கிறோம். எனவே கருணாநிதி அவர்கள் சிலையை சிம்மக்கல் பகுதியில் வைப்பதற்கு பதிலாக, மதுரை ஆட்சியர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டரீதியாக வேறு இடத்தை பரிசீலிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பேராசிரியர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை திறக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள சூழலில், நாளை பாஜக சார்பில் போராட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது, சிலை திறக்கும் சிம்மக்கல் பகுதியில் கருப்பு கொடி போராட்டம் அல்லது கருணாநிதி சிலை திறப்புக்கு வருகை தரும் ஸ்டாலின் வரும் வழியில் சாலை மறியல் என போராட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மதுரையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.