மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்படுவதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகளில் பறிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. அதிலும் பல்கலைக் கழகப் பாடத் திட்டங்கள் வாயிலாக பல்வேறு வகை கருத்தாக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
அம்முறையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் பாட புத்தகமாக இருந்த பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய ‘Walking with the Comrades’ என்னும் நூல். அத் துணைப் பாட நூலை, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்தால் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
முன்பு தந்தை பெரியாரின் ‘உண்மை இராமாயணம்’ நூலின் இந்தி மொழிபெயர்ப்பான ‘சச்சி இராமாயண்’ உ.பி. அரசால் தடை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்ற முறையில் நெருக்கடி நிலை காலத்தில்கூட தடை நீக்கப்பட்டது. ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆயிரம் எண்ணங்கள் பரவட்டும்’ என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இப்படி நடைபெறுகிறது என்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. அரசு நடக்கிறதா? அல்லது அதிமுக அரசா? இரண்டும் ஒன்றுதானே. அவர்கள் எஜமானர்கள் – இவர்கள் அரசு அடிமை அரசா? பல்கலைக் கழகங்கள் பவ்விப் பணிந்து செயல்படுவது – மகா வெட்கம்! உடனடியாக இத்தடையை நீக்கி மீண்டும் பாடமாக்க வேண்டும். பல்கலைக் கழகப் பட்டதாரிகள் பல்வகை சிந்தனைகளைத் தெரிந்து கொள்வது எப்படித் தவறு ஆகும்? வைக்கும்போதே அது தெரிந்து தானே பாட நூலாக வைக்கப்பட்டது? இப்படி மிரட்டினால் அது எங்கு போய் நிற்கும்?