கோழிப்பண்ணைகலிருந்து வெளிப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ்.!சுவாசக் காற்றின் மூலம் வேகமாக பரவும் அபாயம்.!

0
Follow on Google News

உலகின் பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் நோய் தற்பொழுது வர தொடங்கி உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் AVIAN INFLUENZA மற்றும் BIRD FLU வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் 15,000-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஜீப் வாகனம் மூலம் விவசாயம் மற்றும் பல்வேறு பணிகள் தொடர்பாக வேலைக்கு சென்று வருகின்றனர். கேரள மாநிலத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருவதற்கு முக்கியமான பாதைகளான குமுளி (லோயர் கேம்ப்), போடி மெட்டு, கம்பம் மெட்டு, ஆகிய வழித்தடங்களில், சோதனை சாவடிகள் அமைத்து, வேலைக்கு சென்று வரும் நபர்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகின்றார்களா என்பதை கண்காணிக்கவும், அதற்கென சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து பணிகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 89 கோழிப்பண்ணைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் சுமார் 1.50 லட்சம் கோழி வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கோழிப்பண்ணைகளில் நோய் பாதித்து இறந்த கோழிகள், கோழிக் கழிவுகள், பண்ணை உபகரணங்கள், முட்டை தட்டுக்கள், கோழித்தீவனம், தண்ணீர், உடைந்த முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிப்பு இயந்திரங்கள் மற்றும் பறவைக் கூண்டுகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ், சுவாசக் காற்றின் மூலம் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

மேலும், கோழிப் பண்ணைக்குள் இதர கோழிகள் அல்லது வனப்பறவைகள் நுழைவதை அறவே தடுக்கவும், கொக்கு, நாரை போன்ற நீர் பறவைகள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையிலும் பண்ணை வளாகத்திற்குள் நீர் நிலைகள் எதுவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பறவைகளின் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் கோழி வளர்ப்பவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால், இது குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்கென தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, அதன்மூலம் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் தினசரி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, கோழிகளின் இறப்புகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து கேட்டறிய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கோழிகள் கொண்டு வரப்படுகிறதா என்பதனையும் கண்காணித்திட வேண்டும். சாதாரணமாக இந்த வகை வைரஸ் கிருமி மனிதர்களை தாக்குவதில்லை, எனினும் சில நேரங்களில் நோயுற்ற பறவைகளை கையாளும் பொழுது மனிதர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, கோழிப்பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்பதனையும் துறை சார்ந்த அலுவலர்கள் சரிவர கண்காணித்து பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பறவை காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும், பொதுமக்கள் அவ்வப்போது கைகளை கழுவியும், பழங்களை சுத்தமான மற்றும் சுடு தண்ணீரில் கழுவி உட்கொள்ளுமாறும், சுற்றுப்புறத்தினை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும். பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்படின், உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளை அணுகி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.