இந்துக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, அவர்கள் மீதே பழி சுமத்தும் போக்குகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

0
Follow on Google News

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை நாடானா பங்காளாதேஷத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் ஒரு முதுபெரும் பழமொழியை நினைவுபடுத்துகிறது. ’To Shoot a Dog, Call It as Mad’ – ’ஒரு பிராணியைக் கொல்வதற்கு முன்பாக அதை வெறி பிடித்தது என்று முத்திரை குத்து’ என்பது அதன் பொருளாகும். இது அண்மை காலமாக இந்துக்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு இது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். அண்மையில் கூடலூரில் காட்டுக்குள் சுற்றித் திரிந்த ஒரு புலிக்கு (T-23) ’ஆட்கொல்லி புலி’ என முத்திரையிட்டு 20 நாட்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான பேர் அதைச் சுற்றிவளைத்து, சித்திரவதை செய்து, இறுதியில் அதைப் பிடித்து, குற்றுயிரும், குறை உயிருமாகக் கூண்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.

கடந்த 14, 15ஆம் தேதிகளில் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் ’துர்கா பூஜை’ என்ற பெயரிலும், ’தசரா’ மற்றும் ’சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை’ எனும் பெயர்களிலும் சிறப்புறக் கொண்டாடினார்கள். இது ஆண்டுதோறும் இந்துக்கள் அனைவராலும் கொண்டாடக்கூடிய மிக முக்கியமான விழா ஆகும்.

1947 வரையிலும் இந்தியாவின் அங்கமாக இருந்து, பிரிவினையின் பின் கிழக்கு பாகிஸ்தானாகவும், 1971-க்கு பிறகு தனிநாடாகவும் பங்களாதேசம் பரிணமித்துள்ளது. 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அன்றைய கிழக்கு வங்காளம் – பின் கிழக்கு பாகிஸ்தான் – இன்றைய பங்களாதேசத்தில் 28-சதவிகித இந்துக்கள் இருந்துள்ளனர். பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தால் இலட்சக்கணக்கான இந்துக்கள் தங்களுடைய உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதனால் 1951-ல் இந்துக்களுடைய எண்ணிக்கை 6 சதவிகிதம் குறைந்து 22 சதவீதம் ஆகிற்று. தொடர்ந்து பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் காரணமாக லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேறி இன்றைய கணக்கின்படி அங்கு வெறும் 8.9% இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அதாவது கடந்த 74 வருடத்தில் பங்களாதேசத்தில் மட்டும் இந்துக்களின் எண்ணிக்கை 20% குறைந்து விட்டது.

ஒன்றுபட்ட இந்தியாவை மதரீதியாக மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக ஆங்கிலேயர்கள் பிரித்தார்கள். எனினும் மேற்கு பாகிஸ்தானின் மேலாதிக்கம் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது செலுத்தப்படுகிறது; அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்று முஜிபூர் ரகுமான் அவர்களின் தலைமையில் ’முக்தி வாஹினி’ என்ற அமைப்பின் மூலம் போராடினார்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தும் தனிநாடு கேட்டுப் போராடியதை ஏற்றுக்கொள்ளாத ’இஸ்லாமிய பாகிஸ்தான் ராணுவம்’ ஈவிரக்கமற்ற முறையில் சாதாரண குடிமக்களைக் கொடுமைப்படுத்தி தாக்குதல் நடத்தியதால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்திய எல்லைக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அன்றைய காலகட்டங்களில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வலிமையோடு இல்லாமல் இந்தியக் குடிமக்களுக்கே உணவளிக்கப் போராடிய காலகட்டம் அது. எனினும் மனிதநேய அடிப்படையில் ஏறக்குறைய மூன்றாண்டுக் காலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குத் தங்கும் வசதி, குடிநீர், உணவு போன்றவற்றை அளித்துப் பாதுகாத்தது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் நிக்ஸன் எதிர்ப்பையும் மீறியும், அமெரிக்காவின் ‘7 FLEET’ எனும் விமானம் தாங்கிய கப்பல் இந்துமகா சமுத்திரத்திற்குள் நுழைந்ததை பொருட்படுத்தாமலும் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தியப் படைகளை கிழக்கு வங்காளத்திற்குள் அனுப்பி பாகிஸ்தான் ராணுவத்தைச் சரணடைய வைத்து ’பங்களாதேஷ்’ என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்த பெருமை மிக்க நாடு இந்தியத் தேசமே.

மதம் ஒன்றாக இருந்தாலும் கூட பாகிஸ்தானால் ’மாற்றான் தாய் மனதோடு’ நடத்தப்பட்ட பங்களாதேஷ் மக்களுக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் இந்திய மக்கள் மட்டுமே. அந்த பங்களாதேசத்தில் தான் இப்போது ’துர்கா பூஜை’யில் இந்து கடவுள்கள் முன் இன்னொரு மதத்தினரின் புனித நூலை வைத்து அவமரியாதை செய்ததாக வாட்சப்பில் பரப்பியதன் அடிப்படையில் ’நவகாளி’ என்ற இடத்தில் இஸ்கான் (ISKCON) என்ற இந்து மகாசபை தலைவர்கள் இருவரை எரித்து கொலை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்து கோவில்கள் சூறையாடப்பட்டு வருகிறது. நேற்று (16.10.2021) 2000க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி இந்தியாவுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பியுள்ளனர். ஏறக்குறைய 28 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 8.9 சதவீதமாகக் குறைந்தது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் இந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாகும் ஒரு அவல நிலை உருவாகி உள்ளது.

’இஸ்லாமியர்’ என்ற ஒரே மத பிரிவினராக இருந்தும் கூட மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய கொடூரங்களிலிருந்து தப்பித்து வந்த பங்களாதேஷ் மக்களை பாதுகாத்துக் அடைக்கலம் கொடுத்தது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியத் தேசமே. அப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை கொண்ட இந்துக்களுக்கு தங்களுடைய வழிபாட்டு உரிமை கூட இன்று பங்களா தேசத்தில் மறுக்கப்படுகிறது என்பது வருத்தமளிக்கிறது; கவலை அளிக்கிறது.

அண்மை காலமாக இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளிலும் இந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து இருக்கிறது. சொந்த நாட்டுக்குள்ளேயே விவசாயிகள் போராட்டத்தில் இராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிவந்த ’வால்மீகீஸ்’ எனும் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை விவசாயத் தொழிலாளி லக்பீர் சிங் என்பவரை மனிதநேயமற்ற முறையில் தலையைத் துண்டித்துக் காவல் தடுப்பு அரணில் கட்டி தொங்கவிட்டு இருக்கிறார்கள். இதற்கும் ’சீக்கியர்களின் புனித நூலை அவர் அவமதித்து விட்டார்’ என்றே காரணம் கற்பித்தார்கள். ஆனால் ’அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்; குடும்பத்திலிருந்து பிரிந்தவர்; தன்னுடைய கைச்செலவுக்குக் கூட ரூ 50 தன்னிடமிருந்து தான் பெற்றுச் சென்றார்’ என அவரது தங்கை சொல்கிறார். அந்த ஏழை தொழிலாளி மீதும் அப்படி ஒரு அபாண்டம்.

பாகிஸ்தானிலிருந்து ஏற்கனவே எண்ணற்ற இந்துக்கள் வெளியேறிவிட்டனர்; எஞ்சியுள்ளோர் எல்லா அவமானங்களையும் தாங்கி வாழ வேண்டிய நிலை; பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் இந்து மாணவிகள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் மற்றும் திருமணங்கள் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. ஆப்கானில் தலிபான்களின் கீழ் உள்ள அவல நிலையை அனைவரும் அறிவோம்.

அண்டை நாடான இலங்கையில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் மீதான பெரும் தாக்குதலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் எண்ணற்ற இந்து கோவில்கள் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டு வேறு மத சின்னங்கள் வைக்கப்படுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. போரில் உயிர் நீத்த ஈழத்தமிழர்களின் குடும்பங்களில் நிலவும் ஏழ்மையைப் பயன்படுத்தி அக்குடும்ப பெண்மணிகளை ஆசை வார்த்தைகளாலும், அச்சுறுத்தல்களாலும் மதமாற்றம் செய்யப்பட்டு மறுமணம் செய்யப்படுவதாகத் திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. காஷ்மீரில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான சாதாரண இந்து குடிமக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

வேறு மதத்தினர்கள் மீது ஒரு சிறிய தாக்குதல்கள் நடந்தாலும் கூட உலகளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் உடனடியாக கண்டன குரல் எழுப்புகிறார்கள். ஆனால் வாழ்வுரிமை, வழிப்பாட்டு உரிமை என்பது ஒவ்வொரு தனி மனித உரிமைகள் ஆகும். அவை இந்துக்களுக்கு மறுக்கப்பட்டுப் பாதிக்கப்படும் போது மட்டும் மாநில, தேசிய, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுப்பதில்லையே ஏன்? மேற்கத்திய நாடுகளுக்கு இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டும் கண்ணுக்கு ஏன் தெரிவதில்லை எனத் தெரியவில்லை.

இப்பொழுது ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. இந்துக்கள் எங்கெல்லாம் தாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெரும்பான்மையாக உள்ள மதத்தினரின் புனித நூல்கள் அவமதிக்கப்பட்டதாக பெரும் பழியைச் சுமத்துகிறார்கள். இது போன்ற பழிகளை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு பெருங்காட்டு ’தீ’க்கும் சிறு பொறிதான் காரணமாக இருக்கிறது.

இப்பொழுது பங்காளாதேஷ், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும், கட்டாய திருமணங்களும் அனைத்து தரப்பினராலும் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, தடுத்தும் நிறுத்தப்பட வேண்டும்; ஒவ்வொரு முறையும் இந்துக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, அவர்கள் மீதே பழி சுமத்தும் போக்குகளுக்கும் முற்றாக முடிவு கட்டப்பட வேண்டும். அந்த பழிகள் துடைத்தெறியப்பட வேண்டுமெனில் இந்துக்கள் மீது பங்களாதேஷ் உட்பட எங்கெல்லாம் மதக் கலவரங்கள் ஏவி விடப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் கூறும் பழிகளின் உண்மைத்தன்மை குறித்து ஐ.நாவே தனிக்குழுவை அமைத்து விசாரிக்கட்டும். ஐ.நா மட்டுமல்ல தேசிய, சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் அதன் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துரைக்கட்டும். உலகெங்கும் வாழும் இந்துக்களின் வாழ்வுரிமையும், வழிபாட்டு உரிமையும் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படட்டும்!