மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும்.! தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை.!

0
Follow on Google News

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும் கூட, இவற்றை கசப்பு மருந்தாகக் கருதி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் ஆகியவை முழுமையாக மூடப்பட வேண்டும்; சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அனைத்து முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்படும்; கூட்ட அரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த புதியக் கட்டுப்பாடுகள் வரும் 26&ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், செயலளவில் இன்று இரவு முதலே அனைத்து புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறையாகும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் தொழில் இடங்களையும், அவற்றின் இயல்புகளையும் வைத்துப் பார்க்கும் போது நோய்ப்பரவலைத் தடுக்க அவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

கொரோனா இரண்டாவது அலை எவ்வளவு தீவிரமானதாக உள்ளது என்பதை வட மாநிலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகத்திலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் கூட கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா சுமார் 6900 என்ற உச்சத்தை அடைய 6 மாதங்களுக்கு மேல் ஆனது. ஆனால், இரண்டாவது அலையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உள்ளன; சாதாரண பாதிப்புகளுக்கு தேவையான மருந்துகள், கடுமையான பாதிப்புகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள், நோய்த்தடுப்புகான தடுப்பூசிகள் போன்றவை தேவைக்கு ஏற்ற அளவில் உள்ளன. இது பெருந்துயரத்திலும் நிம்மதியளிக்கும் விஷயம் ஆகும்.

சென்னையில் இப்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் இருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டும் என்றும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலோ, அதை விட மோசமான நிலை உருவானாலோ, வட இந்திய மாநிலங்களில் நிலவுவது போன்ற மோசமான சூழல் தமிழ்நாட்டிலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அப்படி ஒரு மோசமான நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், அரசு இப்போது அறிவித்துள்ளது போன்ற சற்றே எளிதான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மிகப்பெரிய ஆபத்தை தடுக்க இந்த கசப்பு மருந்தை நாம் உட்கொண்டு தான் ஆக வேண்டும். கடந்த ஆண்டில் நோய்த்தொற்று மிகவும் குறைவாக இருந்த நிலையிலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இம்முறை அத்தகைய ஊரடங்கின் சமூக, பொருளாதார விளைவுகளை சமாளிக்கும் நிலையில் தமிழ்நாடு இல்லை. ஆனாலும், நம்மைக் காக்க நமக்கு நாமே சாத்தியமான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். அது தான் நமது உயிரைக் காக்கும்.

பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது. வீடுகளை விட்டு வெளியில் வரும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியிடங்களில் 2 மீட்டருக்கும் கூடுதலாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; வெளியில் சென்று வீடுகளுக்கு திரும்பும் போது கைகளை நன்றாக கழுவ வேண்டும்; மருத்துவர்களின் அறிவுரைப்படி கபசுரக்குடிநீர் அருந்த வேண்டும். இவற்றைக் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா நெருங்காமல் தடுக்க முடியும்.

நோய்த்தடுப்புக்காக குடிப்பகங்களை மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ள தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும். அது தான் பெருமளவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும். முடித்திருத்தகங்களை மூடுவது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் வாழ்வாதாரங்களை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்.