சட்டம் ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நடிகர் ஜெமினி கணேசனின் 100 வது பிறந்தநாள் விழா புத்தக மலரை வெளியிட்ட பின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதால் தான் முதலீடுகள் அதிகளவில் வந்துகொண்டிருக்கிறது.
குற்றங்கள் நடக்காமல் விழிப்போடு பாதுகாப்பது அரசின் கடமை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது அரசின் கடமை. திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் வீட்டில் ஆயுதக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்றால் அது பா.ஜ.வை வலுப்படுத்த மட்டுமே. அமித்ஷா அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தகவல் வரவில்லை. பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார். எனவே அரசு நிகழ்ச்சி இருக்கலாம் . தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ஜ.க வை பலப்படுத்தவே தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
இதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை.அதிமுக – பா.ஜ.க தற்போது கூட்டணியில் தான் இருந்து வருகிறது. கூட்டணி குறித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை என்றார். தொடர்ந்து சூரப்பா குறித்த கேள்விக்கு திமுகவைப் பொறுத்தவரையில் எதையும் யோசிக்காமல், விசாரணை இல்லாமல், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. இயற்கை நியதி என்று ஒன்று இருக்கிறது.
யாராக இருந்தாலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எந்தப் பதவியில் உள்ளவராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். அதனடிப்படையில்தான், விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தருகின்ற அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.