நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து, அதிமுக தோல்வியை தழுவியது, இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் யார் என்பதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையில் கடும் மோதல் நீடித்து வந்தது, இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இருதரப்பினர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் கூட்டம் மே 10ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது, இந்நிலையில் 7ம் தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி செல்லும் வழியில் ஓபிஎஸ் வாழ்க என கோஷமிட்டார், ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி செல்லும் போதும் கூட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வாழ்க என எடப்பாடி பழனிசாமியை சூழ்ந்து கொண்டனர், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மே 10ம் தேதி காலை மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 2 மணி நேரமாக நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நீடித்து வந்த நிலையில் திடீரென அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான அதிரப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் எதற்காக போலீஸ் குவிக்கப்பட்டது என்பது குறித்து மர்மம் நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இது குறித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதில், கடந்த மே மாதம் அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தின் போது தீடிரென அலுவலகம் உள்ளே ஆயுதங்களுடன் ஒரு கும்பல் புகுந்துவிட்டதாக தெரிவித்தார், இந்த தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்திய உடன் அங்கே போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில் தலைமை அலுவகத்தில் ஆயுதங்களுடன் ஆட்கள் குவிக்கப்பட்டதாகவும், இந்த தகவல் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்திய உடன், எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை என தெரிவித்தார்கள்.