யூ ட்யூப் என ஒன்றை அந்த கம்பெனி எதற்கு உருவாக்கியதோ தெரியாது, ஆனால் அதனால் படுபயங்கர விளைவுகளெல்லாம் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன . ஒரு பக்கம் நல்ல விஷயம் நடந்தாலும் இன்னொரு பக்கம் ஆபத்தான விளைவுகளும் நடக்கின்றன, வேலூரில் ஜெய் ஆலுக்காஸ் நகைகடையில் நடந்த கொள்ளை பற்றி அந்த கொள்ளையன் அதிர வைக்கும் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்
அவனுக்கு பெரும் பணக்காரனாகி சினிமா தயாரிக்க ஆசையாம், அதற்காக இனி கட்சி தொடங்கி அல்லது சினிமாவில் நடித்து படமெடுப்பதெல்லாம் முடியாத விஷயம் என தெரிந்திருக்கின்றது இதனால் சினிமா, அரசியல் தாண்டி மூன்றாவது விஷயமான கொள்ளையினை சிந்தித்திருக்கின்றான் இதற்காக அவன் யூடியூபில் கொள்ளை அடிப்பது எப்படி என தேடியிருக்கின்றான், பல ரகசிய பாடங்கள் கிடைத்திருக்கின்றன, அப்படியே அதை உள்நோக்கி தேடினால் அவனுக்கு சில பயிற்சியாளர்களும் கிடைத்திருக்கின்றார்கள்
அவர்கள் கட்டணம் வாங்கி அவனுக்கு கொள்ளை அடிக்க பயிற்சி கொடுத்து, யூ ட்யூபில் இன்னும் சில வீடியோக்களை காட்டியிருக்கின்றார்கள். மும்பையில் இந்த பயிற்சி முடிந்ததும் தமிழகம் வந்த அவன் கைவரிசையினை காட்டியிருக்கின்றான், சத்தமில்லாலம் சுவரை உடைப்பது, சிசிடிவிகளை ஏமாற்றுவது, அடித்த தங்கத்தை சுடுகாட்டில் பதுக்குவது என எல்லாமும் யூ ட்யூப் பார்த்து கற்று கொண்டானாம்
சரி, இவன் எப்படி சிக்கினான் என்றால் அந்த நகையில் ஒரு தங்க ருத்திராட்சம் இருந்ததாம், இவனுக்கு அதை உருக்க மனமில்லையாம் பக்தி பீறிட்டு வந்து அதை கழுத்தில் அணிந்திருகின்றான். அதில் இருந்த கடை அடையாளத்தை கண்ட காவல்துறை ருத்திராட்சத்தை வணங்கி அதை கழற்ற சொல்லிவிட்டு அவனை அமுக்கி கொண்டது இப்படி வாக்குமூலம் கொடுத்து கொண்டிருக்கின்றான் இப்படித்தான் கொடுத்து கொண்டிருகின்றான், – ஸ்டான்லி ராஜன்.