“தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி – அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி மண்ணில் இருந்து தொடங்குகிறது என்றும், பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் மாநிலத்தை கொள்ளையடிப்பது – பாஜக அரசுக்குக் கொத்தடிமையாக இருப்பது மட்டுமே” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார், அவர் மேலும் பேசியதாவது,
பழனிசாமி அரசு எத்தகைய அரசு என்பதை சமீபத்தில் பார்த்தோம். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதும். 25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விட்டது. 25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது.
அந்த ஒப்பந்தகாரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அவை கண்துடைப்பு நடவடிக்கைகள். சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கும் மீண்டும் வேலை தரப்பப்பட்டு விடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கிருஷ்ணகிரி அணையின் ஷட்டரை புதுப்பித்து 2016 ஆம் ஆண்டு இந்த அரசு ஒப்படைத்தது. ஆனால் ஒழுங்காக அமைக்காததால் ஷட்டர் உடைந்தது.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 35 கோடி செலவில் அணை கட்டப் போவதாக சொன்னார்கள். ஆனால் தடுப்பணை தான் கட்டினார்கள். 2015 ஆம் ஆண்டு அடித்த வெள்ளத்தில் தடுப்பணையே உடைந்துவிட்டது. இப்போது அதை சரி செய்ய 20 கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். புதிதாக 8 அணைகளைக் கட்டப் போவதாக 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் பழனிசாமி அரசின் ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி – என்று நமக்கு ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள். சுயாட்சி பெற்ற மாநிலம், கூட்டாட்சி கொண்ட மத்திய அரசு. இதுதான் கலைஞரின் கொள்கை. கலைஞரை உருவாக்கிய அண்ணாவின் கொள்கை. ஆனால் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற பழனிசாமிக்கு சுயாட்சி செய்யவும் தெரியாது. கூட்டாட்சித் தத்துவமும் புரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம், மாநிலத்தில் கொள்ளை அடிப்பது, மத்திய ஆட்சிக்கு கொத்தடிமையாக இருப்பது.
இதுதான் அவரது கொள்கை. தனிப்பட்ட பழனிசாமி எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அது நமக்கு பொருட்டல்ல. ஆனால் ஒரு நாட்டின் முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கான எந்த இலக்கணமும் இல்லாமல் – வெறும் தலைக்கனத்தோடு மட்டுமே செயல்படும் பழனிசாமியிடம் இருந்து மாண்புமிகு பதவியைப் பறிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். மாண்புமிகு மக்கள் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்தார்.