தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அன்றைய ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்ட தினம் இன்று. 1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கு முன்பு 1991-1996 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், `என்னை 27 நாட்கள் சிறையில் வைத்திருந்த கருணாநிதியைப் பழிவாங்காமல் விட மாட்டேன்’ என்று வெளிப்படையாகவே பேசினார். இதன் பின்பு 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி ஜெயலலிதா முதலமைச்சராக பெறுபேற்ற அடுத்த ஒன்றரை மாதங்களில் தி.மு.க ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாக 2001-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி இரவு 9 மணியளவில் சென்னை மாநகர ஆணையர் ஜே.சி.டிஆச்சார்யாலு அளித்த புகாரின்படி சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் வழக்குப் பதியப்பட்டது.
கருணாநிதி கைது மிகச்சில அதிகாரிகளுக்கு மட்டும் தெரியும்படியாக பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஜூன் 30 நள்ளிரவு 1.45 மணியளவில் மயிலாப்பூர் ஆலிவர் ரோட்டில் இருந்த கருணாநிதி இல்லத்துக்குள் நுழைந்த போலீஸார் முதல் மாடியில் இருந்த அவரது அறைக்குள் நுழைந்து அவரை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர், சிறிது நேரத்தில் அங்கே கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, லுங்கியுடன் இருந்த கருணாநிதியை குண்டுக்கட்டாகத் தூக்கி சென்றனர் போலீசார், அப்போது அய்யோ கொலை பன்றாங்க என்று கருணாநிதி சத்தம் போட்ட சம்பவம் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்ப பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதி கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கைது செய்தது போலீஸ்.
இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை ஜூலை 10-ம் தேதி வரை சிறையில் அடைப்பதற்கான உத்தரவைப் பெற்றது போலீஸ். சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி தன்னுடைய மகள் கனிமொழியுடன் சிறை வாசலில் சுமார் ஒரு மணிநேரம் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து கருணாநிதியை விடுதலை செய்ய மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசின் உதவியை நாடியது திமுக.
அப்போது மத்திய பாஜக அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்து வந்தது, இந்தசூழலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே போன் செய்தார். ஆனால், அந்த அழைப்புகளை ஜெயலலிதா எடுக்காத நிலையில், முதன்மை செயலாளரிடம் அறிக்கை கேட்டது மத்திய அரசு. அதேபோல், ஜெயலலிதா அரசின் இந்த நடவடிக்கையையும் வாஜ்பாய் கடுமையாகக் கண்டித்தார்.மேலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி `கருணாநிதி கைது தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது’ என்று கண்டனம் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் அழுத்தம் காரணமாக 2001 ஜூலை 4-ம் தேதி கருணாநிதி விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த கைது விவகாரத்தால் அப்போதைய கவர்னர் பாத்திமா பீவியைத் திரும்பப் பெற மத்திய அமைச்சரவை முடிவு செய்து, அவர் பதவி விலகினார்.ஆனால், 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அ.தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்ற தி.மு.க கோரிக்கையை மத்திய அமைச்சரவை நிராகரித்தது குறிப்பிடதக்கது.