திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்ததாவது, அன்றைய தேதியில் #MeToo போன்றவை இல்லை. வெளிப்படையாக ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைப்பது கடினம். ஆனால் இன்று அப்படியில்லை. எத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும் வைக்கலாம் எனும் நிலை வந்துள்ளது. இந்த மாறிய சூழ்நிலையில் என் நேர்காணல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது படிக்காதவர்கள் இப்போது படித்துத் தெரிந்து கொள்ளலாம், படித்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளலாம்.
என் தெருப் போராட்டத்தின் முடிவில், தியாகு மீது தனியார் குழு ஒன்றின் விசாரணை அறிவிக்கப் பட்டது. ஓவியர் வீரசந்தனம் அவர்கள் தலைமையில், இயக்குநர் வ.கௌதமன் ( இன்று தமிழ்ப்பேரரசுக் கட்சி), ஊடகவியலாளர் பா.ஏகலைவன் முன்னெடுப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 1½ ஆண்டுகள் அரும்பாடு பட்டு ஓரளவு முடித்திருந்தோம். அவற்றுக்கான அடுத்தகட்ட நிகழ்வில், எதிர்பாராமல் ஐயா வீரசந்தனம் மறைந்தார். அவரிடம் கொடுக்கப் பட்டிருந்த விசாரணை தொடர்பான கோப்பும் காணாமல் போனது. அதோடு இந்த விவகாரத்தை முன்னெடுக்க முடியாமல் தேங்கிப் போனது எனக்கான பின்னடைவு ; தியாகுவுக்குக் கொண்டாட்டம் !
இருந்தாலும் இது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளதாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பொறுக்கிகளுக்கு எதிராக இருப்பதாலும் அவற்றை தூசி தட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது. 2012 இல் தியாகு ஓடிப் போனது ஒரு பெண்ணுடன். 2014 இல் ஓடிப் போனது வேறொரு பெண்ணுடன். இரண்டுக்கும் இடையில் 2013 இல் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்றொரு கேலிக்கூத்து.
2012 இல் ‘அந்தப் பெண்’ணுடன் ஓடிப் போனபோது, வைகோ அவர்கள் வீட்டில் வைத்து, பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் முன்னிலையில் தவறுகளைத் திருத்தி வீடு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டார் தியாகு. தெரியாமல் செய்தால்தானே தவறு ? தெரிந்தே செய்வது குற்றமல்லவா ?. எனவே மீண்டும் தொடர்ந்தார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் தியாகு மீது வெளிப்படையாக வந்து, அவரது சொந்த இயக்கத்திலிருந்தே அவர் வெளியேற்றப்பட்டு, பொருளுதவிகள் நிறுத்தப்பட்டு அரசியல் அநாதையாக, பிச்சைக்காரனாக நின்றபோது, ‘ஐயோ தியாகு உங்களுக்கு நானிருக்கிறேன்’ என்று கட்டிப் பிடித்துக் கொண்டவர் சுபவீ. ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடாதல்லவா ? ‘அந்தப்பெண்’ சுமத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து திசைதிருப்ப தியாகு+சுபவீ கூட்டு மூளையில் உதித்ததுதான் ‘ காமன்வெல்த் உண்ணாவிரதப்’ போராட்டம் ! முன்னரே ஒத்திகை பார்த்த நாடகம் ! நானே கண்ணுற்ற சாட்சி ( Eye Witness ) ! அப்போதிருந்து இரண்டு பேரின் கூட்டுக் கயமைத்தனம் Going Steady !.
2014 இல் ‘இந்தப் பெண்’ணுடன் ஓடியபோது, நான் இனி பொறுப்பதில்லை என்று வெளியே வந்து போராட்டம் நிகழ்த்தினேன். அப்போது தியாகு மறந்தும் மன்னிப்புக் கேட்டுவிடக் கூடாது என்று இட உதவி, பொருளுதவி, அரசியல் உதவி எல்லாம் செய்து அரணாக நின்றவர் சுபவீயார் ! இதில் கலைஞர் ஐயாவின் பெயரைச் சொல்லி எனக்கு அச்சுறுத்தல் வேறு ! அண்மையில் இரண்டு பேரும் ஒருவரையொருவர் எதிர்த்து திராவிடமா ? தமிழ்த்தேசியமா ? என்று ‘மயிர் பிளக்கும்’
விவாதத்தை நடத்தி வருவதையும் ‘ஆகா, இப்படியொரு அறிவார்ந்த விவாதமா?’ என்று அப்பாவி ஆடுகள் வாய்பிளந்து நிற்பதையும் அரசியல் வட்டாரம் கண்ணுற்றிருக்கலாம். நம்புங்கள், அத்தனையும் நடிப்பு ! இருவரும் எதிரெதிர் தரப்பில்லை, ஒரே தரப்புதான் – மக்களை முட்டாளாக்கும் தரப்பு !. அதிலும் சுபவீயார் இப்போது ஏதோ ‘திராவிடத்துக்கே’ தன்னை தத்துவ ஆசான் போலவும் திராவிடர் கழகங்களின் தகத்தகாயக் கேடயம் போலவும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான புள்ளிகளை வாரி வழங்கும் ‘ஆயுத அளிநர்’ (Weapon Supplier) ஆகவும் தன்னைக் காட்டிக் கொள்வது….
பெண்விடுதலைக்கு அடிகோலிய பெரியாரியம் பழைய காலம் ; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முன்னணியில் இருப்பது நிகழ்காலம் ! அடுத்தவன் செய்தால் குற்றம், தான் செய்தால் புரட்சி என்கிற நிலையெடுத்த திராவிடர் கழகங்களின் அறத்தைப் பார்த்து நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இவர்களை அம்பலப்படுத்தும் காலம் வந்து விட்டது எனத் தோன்றுகிறது. காலம்தான் எத்தகைய விந்தைகளை நிகழ்த்துகிறது ! உண்மை உறங்குவதில்லை, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளந்து வெளியே வரும் என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். காத்திருங்கள்….