நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா ஐ எக்ஸ் 1644 விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரபீக், 25, சென்னையை சேர்ந்த முகமது யாசிர் கான், 23, மற்றும் திருச்சியை சேர்ந்த முஜிபுர் ரகுமான், 34, மற்றும் பிலால், 33, ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை சோதனையிட்ட போது, நான்கு தங்க துண்டுகள் (198 கிராம்), 4 தங்க சங்கிலிகள், 6 தங்க பசை பொட்டலங்கள் அவர்களது கால் சட்டைப்பைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. ரூ 9.8 லட்சம் மதிப்புள்ள 12 ஐபோன்கள், சிகரெட்டுகள், உடல்நல பொருட்கள் ஆகியவை அவர்களது கைப்பைகளில் கண்டறியப்பட்டன. 1.72 கிலோ எடையுள்ள தங்கம், முஜிபுர் மற்றும் பிலாலின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்டது. இவர்களிருவரும், முகமது ரபீக்கும் கைது செய்யப்பட்டனர்.
ஃபிளை துபாய் விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஃபாசில் ரகுமான், 27, மற்றும் அசோக் குமார், 22, மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மதன் குமார், 26, ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை சோதனையிட்ட போது, 1.72 கிலோ எடையுள்ள தங்கப் பசை கைப்பற்றப்பட்டது. 49 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, ரூ 9.35 லட்சம் மதிப்புடைய சிகரெட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏர் அரேபியா விமானத்தில் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த முகமது வாரிஸ், 25, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இசானுல்லா, 32 ஆகியோரிடம் இருந்து 3 பொட்டலங்களில் தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய மதுரையை சேர்ந்த சையத் முகமது என்பவரிடம் இருந்து தங்கமும், ஃபிளைட் எஃப் இசட் 8518-இல் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ரசூலுதீன், 29, என்பவரிடம் இருந்து வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.
ரூ 2.14 கோடி மதிப்பிலான தங்கம், ரூ 5.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம், ரூ 19.15 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள், சிகரெட்டுகள், உடல்நல பொருட்கள் என மொத்தம் ரூ 2.65 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.