20% இட ஒதுக்கீடு வன்னியர்களின் சொத்து அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.! மருத்துவர் ராமதாஸ் ஆவேசம்.!

0
Follow on Google News

20% இட ஒதுக்கீடு வன்னியர்களின் சொத்து என்றும் அதை முழுமையாக அடையும் வரை ஓய மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர்களின் சொத்து. அது எளிதாக கிடைத்துவிடவில்லை. 10 ஆண்டுகால போராட்டம்… 21 சொந்தங்களை பலி கொடுத்து தான் எங்களுக்கான சமூகநீதியை வென்றெடுத்துள்ளோம்.

20% இட ஒதுக்கீட்டுப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம். நியூயார்க் டைம்ஸ் இதழில் பாராட்டி எழுதப்பட்ட போராட்டம். எம்.ஜி.ஆரையும், கலைஞரையும் கதிகலங்க வைத்தப் போராட்டம். 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்.

ஒருமுறை கலைஞரிடம் ஏமாந்த நாங்கள் இனியும் யாரிடமும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. 20% இட ஒதுக்கீட்டுக்காக அதை அனுபவிக்கும் எந்த சாதியும் போராடவில்லை; ஆதரவுக் குரல் கூட கொடுக்கவில்லை. அது முழுக்க, முழுக்க வன்னியர்களின் சொத்து. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சொத்தை மீட்பதற்காகவே அறவழி தொடர் போராட்டங்களை நடத்துகிறோம். இனியும் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. 20% இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்.

மேலும் அவர் கூறியதாவது, 1987-ஆம் ஆண்டில் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைப் பாராட்டி நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் Tindivanam Journal; Seeking Its Share, Rural Caste Tries Disobedience என்ற தலைப்பில் எனது புகைப்படத்துடன் கால் பக்க அளவுக்கு செய்திக்கட்டுரை வெளியிட்டது. 1989-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து அதில் ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்கலாம் என்ற அறிவியல்பூர்வமான திட்டத்தை கலைஞரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் இரு பிரிவுகளாக மட்டும் பிரித்து துரோகம் செய்தார்!

10 ஆண்டுகள் போராடி, 21 உயிர்களை பலி கொடுத்த வன்னிய சமுதாயத்துக்கு 20% இட ஒதுக்கீடு தராமல், தனது சமுதாயம் உள்ளிட்ட 108 சமுதாயங்களுடன் சேர்த்துக் கொடுத்து வன்னியர்களுக்கு சமூகநீதி கிடைக்காமல் தடுத்தார்! பிற்படுத்தப்பட்ட வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்ததிலேயே இன்னுமொரு துரோகம் செய்தார். சமூகநீதிப் பசியுடன் நீண்டகாலமாக மிக மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 30%, முன்னேறிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20% தருவதற்கு பதிலாக தலைகீழாக மாற்றிக் கொடுத்தார்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள சாதிகளைச் சேர்ப்பதற்கு பதிலாக முன்னேறிய நிலையில் உள்ள சில சாதிகளையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீட்டையும் அவர்கள் கைப்பற்றிக் கொள்ள வகை செய்தார்! மீண்டும் சொல்கிறேன்…. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 தொகுப்புகளாக, ஆந்திரத்தில் 6 தொகுப்புகளாக, கர்நாடகத்தில் 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் அங்கு அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்கிறது!

ஆனால், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு 39 ஆண்டுகள் ஒரே தொகுப்பாகவும், வன்னியர்கள் போராட்டத்திற்குப் பிறகு 1989 முதல் 32 ஆண்டுகளாக இரண்டே தொகுப்பாகவும் பிரித்து சமூக அநீதி இழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறையால் சில குறிப்பிட்ட சமுதாயங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றன. இந்த சமூக அநீதி களையப்பட வேண்டும். சமூகநீதி தழைக்க வேண்டும். அதற்கான தீர்வு வன்னியர் தனி இட ஒதுக்கீடு தான் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.