2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் எந்த பவுலர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் மற்றும் எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவிப்பார் என்பது குறித்த அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக தொடங்க உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் பொருட்டு, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் முக்கிய அணிகள் லீக் போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியா உட்பட அனைத்து கிரிக்கெட் அணிகளும் நாக் அவுட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் t20 உலக கோப்பை தொடருக்கான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,”இந்திய அணியைச் சேர்ந்த பும்ரா நிச்சயமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தக்கூடிய பவுலராக இருப்பார். அவர் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடியவர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பும்ராவின் எக்கானமி ஏழு ரன்களுக்கு கீழாக இருந்தது.
அதே சமயம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடினமான ஓவராக கருதப்படும் ஓவர்களை தொடர்ந்து வீசி இருக்கிறார். இவ்வாறு கடினமான ஓவர்களை வீசுபவரால் நிச்சயமாக டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட் களை வீழ்த்த முடியும்.எனவே இந்த உலகக் கோப்பை போட்டியில் பும்ரா அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்று நம்புகிறேன்.
அதேபோல், ட்ராவிஸ் ஹெட் அதிக ரன்களை விலாசக்கூடிய பேட்ஸ்மேனாக இருப்பார் என்று கனிக்கிறேன்.ஏனெனில் அவர் கடந்த சில ஆண்டுகளாக ரெட் பால் ஒயிட் பால் என அனைத்து வடிவங்களிலும் அபாரமாக விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.இப்போது டிராவீஸ் ஹெட்டிடம் கொஞ்சம் கூட தயக்கமா பயமோ கிடையாது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன.
இருப்பினும் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் புர்மா தவிர்த்து மற்ற பவுலர்கள் யாரும் சொல்லுபடியாக பார்மில் இல்லை, அப்படி இருக்கையில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்தியா அணிக்கு கூடுதல் பலமாக அமைத்திருக்கும், அந்த வகையில் புர்மா தவிர்த்து மற்ற இந்திய பவுலர்களின் பந்துகளை பவுடரிக்கு பறக்க விடுவார்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.