சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முந்தைய போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐஸ் பேக் வைத்து பயிற்சியில் ஈடுபடுவது, ரன் ஏதும் எடுக்காமல் குறைந்த ஓவர்களில் பேட்டிங் செய்வது என ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில், தற்போது சிகிச்சைக்குப் பிறகு காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
வருகிற சனிக்கிழமை அன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக வலைப்பயிற்சியில் தோனி பௌலிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி ஆறு தோல்வி என 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, ருத்ராஜை புதிய கேப்டனாக நியமித்தார். இந்த சீசனில் ருத்ராஜின் கேப்டன்சியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் டோனி பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக எல்லா போட்டிகளிலும் கடைசி ஓவரிலேயே களம் இறங்குகிறார். இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி, 136 ரன்கள் விளாசி இருக்கிறார். வழக்கம்போல, கடைசி ஓவர்களில் களம் இறங்கி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த பினிஷர் ஆக அவருக்கே உரிய ஸ்டைலை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில், முந்தைய போட்டிகளின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வந்த தோனி ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தார்.இருப்பினும் தோனி காலில் காயத்துடன் ஐஸ் பேக் வைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர்கள் தரப்பில், தோனியால் ரெண்டு முதல் மூணு ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்ய முடியும் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் வருகின்ற சனிக்கிழமை அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொள்கின்றனர். அவர்களுடன் தோனியும் வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக, தோனி பௌலிங் செய்து சக வீரர்களுடன் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தோனி பௌலிங் செய்யும் வீடியோவை சிஎஸ்கே அணி இணையத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தோனி குணமடைந்து விட்டது நன்கு தெரிகிறது. அதாவது நான் வந்துட்டேன் சொல்லு, திரும்ப வந்துட்டேன் சொல்லு, இனிமேல் பழைய தோனியை பார்க்க போறீங்க என்று தோனி சொல்வது போன்று அமைத்துள்ளது, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கி பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தோனி மீண்டும் முழு உடல் தகுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது சென்னை அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.