உங்களுக்கு வெட்கமே இல்லையா…ஓவர் ஆட்டம் போட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரை கடுமையாக சாடிய சேவாக்…

0
Follow on Google News

கடந்த திங்கள்கிழமை ஜூன் 10ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள நாசாவு கவுண்டி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் t20 உலக கோப்பையின் 21வது லீக் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேச அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் சக்கிப் அல் ஹசன் நான்கு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மேலும், ஷகீப் அல்ஹசனை கடுமையாக சாடி இருக்கிறார். இவ்வாறு சேவாக் பங்களாதேஷ் அணியின் கேப்டனை வெளிப்படையாக விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரும் பங்களாதேஷ் அணியின் கேப்டனுமான ஷகீப் அல்ஹசன் சிறந்த ஆல் ரவுண்டர் கிரிக்கெட்டர் ஆவார்.

சிறப்பாக பேட்டிங் ஆடும் திறன், சிக்கனமாக பந்து வீசுவது மற்றும் அற்புதமாக ஃபீல்டிங் செய்வது என பன்முக ஆட்டக்காரராக பரவலாக அறியப்படுகிறார். அதுமட்டுமில்லாமல், ICCயின் ஒன்டே சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

இத்தனை புகழ்களுக்கு சொந்தக்காரரான ஷகீப், சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் போட்டியில் படுமோசமாக விளையாடி சொதப்பியிருந்தார். இதனால் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்களும் ஷகீப் டி20 உலக கோப்பை தொடரில் இவ்வளவு மோசமாக சொதப்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இப்படியான நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் ஷகீப்பின் பெர்ஃபாமன்ஸ் குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், சரமாரியாக கேள்வி எழுப்பி கிழித்து தொங்க விட்டிருக்கிறார். இதுகுறித்து சேவாக் பேசிய போது, “நான் கடைசி உலகக் கோப்பை பார்க்கும் போதே ஷகீப் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார் என்று நினைத்தேன்.

என்னை பொருத்தவரை அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிய வில்லை. கிரிக்கெட் உலகில் இவ்வளவு சீனியராக இருந்து கொண்டு, அணியை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் கேப்டன் ஆகவும் இருந்து இப்படி மோசமாக ஆட்டம் இழப்பது ஷகீப் அல் ஹசனுக்கு வெட்கமாக இல்லையா?

உண்மையில், நீங்களாகவே முன்வந்து டி20 உலக கோப்பையில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்திருக்க வேண்டும். ஷகீப் அல் ஹசன் ஒன்றும் ஆடம் கில்கிறிஸ்டோ, மேத்யூ ஹிடனோ கிடையாது. நீங்கள் ஒரு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர். உங்களுடைய பலம் எதுவோ அதற்கு ஏற்ற மாதிரி விளையாடுங்கள். உங்களிடம் அனுபவம் இருக்கிறது என்பதற்காக தான் நீங்கள் உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கிறீர்கள்.

எனவே உங்கள் அனுபவத்தை பயன்படுத்தி உங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடுங்கள்.. கிரவுண்டில் கொஞ்ச நேரம் செலவழித்து விளையாடுங்கள்” என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார். சேவாகிங் இந்த கருத்து பங்களாதேஷ் அணி ரசிகர்களை ஆத்திரம் அடையச் செய்து உள்ளது. பங்களாதேஷ் அணி கேப்டனை விமர்சனம் செய்த விதம் கண்டனத்திற்குரியது இன்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.