மும்பையில் நடந்த ஐபிஎல் டி20 ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயானது எனக் கருதினால் அது விளையாட்டு விமர்சகரின் பார்வைதான். ஆனால், ரசிகர்கள் பார்வையில் இருந்து பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும், மும்பை ரசிகர்களுக்கும் இடையிலான போட்டியாகத்தான் பார்க்க முடியும்.
இதுவரை 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா எங்கு சென்றாலும் “boo” என சத்தமிட்ட ரசிகர்கள், ஒருபடிக்கு மேலே சென்று மைதானத்தில் நாய் ஒன்று புகுந்த போதும் “ஹர்திக் ஹர்திக்” என சத்தமிட்டு வெறுப்பை வெளிப்படுத்தினர்.
ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்திலும் பங்கேற்ற நடுநிலை ரசிகர்கள்கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கக்கூடாது என்பதுபோல அங்கும் தங்களின் அதிருப்தி குரலையும், கிண்டலையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் மும்பை அணியின் ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் இன்று போட்டி தொடங்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
சஞ்சய் மஞ்சரேக்கர் டாஸ் போடும் நிகழ்வின்போது, இரு அணிகளின் கேப்டன்களையும் அறிமுகப்படுத்தினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று கூறியபோது, ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர், ஒருவர்கூட வரவேற்பு அளித்து கரகோஷம் எழுப்பவில்லை என தெரிவித்த போது, வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.
இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்… ரோஹித்…. ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா பேட் செய்ய களத்துக்குள் வந்தபோது “கணபதி பாப்பா மோரியா” என்ற கோஷம் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்து அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தது.
சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ரோகித் ஆட்டமிழந்தார். அதனால் அப்போதைக்கு அந்த முழக்கம் சற்றே எழாமல் இருந்தது. பின்னர் பவுண்டரி லைனில் ரோகித், பீல்ட் செய்தபோது ‘ரோகித்… ரோகித்…’ முழக்கம் ஒலிக்க தோன்றியது. அப்படி செய்ய வேண்டாம் என்றும், அமைதியாக இருக்கும் படியும் பார்வையாளர்களை அமைதியாக இருக்குமாறு சைகை மொழியில் ரோகித் தெரிவித்தார். அதாவது பாவம் ஹர்திக் பாண்டியா பொழச்சு போகட்டும் என ஹர்திக் பாண்டியாவை ரோஹித் சர்மா மன்னித்து விட்டது போன்று இருந்தது ரசிகர்களை பார்த்து ரோஹித் சர்மா செய்த சைகை..
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து அவர் மீதும், அணியின் மீதும் விமர்சனம் எழுந்து வருகிறது. அவர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றின் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதில், ஹோம் மைதானத்தில் நடந்த 3 ஆவது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் தோல்வி அடைந்தது.