இந்தியாவுடன் பாகிஸ்தான் தோல்வி… செருப்பு கூட நீங்க ஈடாக மாட்டீர்கள்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆவேசம்..

0
Follow on Google News

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த நிலையில், பாகிஸ்தான அணியின் கிரிக்கெட் வீரரே அந்த அணியின் கேப்டனை இழிவாகப் பேசி இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 2024 ஐசிசி t20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு உலகக் கோப்பையில் சுமார் 20 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் களம் இறங்குகின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எத்தனை நாடுகள் மோதினாலும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால், அது இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் ஆட்டம் தான்.

அந்த வகையில், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள நாசா கவுண்டி மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களம் இறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 19 ஓவர் முடிவில் 119 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பிறகு, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் தோல்வியுற்றது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வியை தழுவியிருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள அமெரிக்க அணியிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, இதற்கு முன்னதாக தங்கள் சொந்த மண்ணில் அயர்லாந்து அணியிடம் மோதி தோல்வியை சந்தித்திருந்தது.

பாகிஸ்தான் அணியில் அபாரமாக விளையாடக்கூடிய கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் இவ்வாறு தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் என்று பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தாலும், அவ்வப்போது மெதுவாக ஆடி அணியின் தோல்விக்கு காரணமாகி விடுகிறார் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்படியான நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கணேரியாவும் பாபர் அசாம் குறித்து காட்டமாக பேசி இருக்கிறார். அதாவது, “பாபர் அசாம் ஒரு போட்டியில் சதம் அடித்தால் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கலாம். ஆனால் அவர் விராட் கோலியின் செருப்புக்கு கூட சமமாக மாட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், “அமெரிக்க பவுலர்கள் அவரை ரன் எடுக்க விடாமல் திணறடித்தார்கள். அந்த பவுலர்களை சமாளித்து கூட அவரால் விளையாட முடியவில்லை. சரியாக 40 ரன்கள் எடுத்தவுடன் ஆட்டமிருந்து வெளியேறினார். அவர் போட்டியில் கடைசி வரை நின்று வெற்றியை தேடி கொடுத்திருக்க வேண்டும்.” என்று டேனிஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசும்போது, “பாகிஸ்தான் அணியினர் நகைச்சுவை செய்கிறார்கள். அவர்கள் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தீவிரமான மனநிலையில் இல்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் சுற்றுலா சென்று இருக்கிறார்கள்.பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடவே முடியாது” விராட் கோலியின் கால் செருப்புக்கு கூட சமமாக மாட்டார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டானிஷ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.