ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் மிரட்டலாக பவுலிங் செய்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால், அவரை இந்த முறையாவது t20 உலக கோப்பை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி மூன்று ஓவர்களில் 43 ரண்களை குவித்து இருந்தது. இதனால் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் நடராஜனுக்கு பவுலிங் வாய்ப்பு கொடுத்தார்.
நடராஜன் வீசிய முதல் பந்திலையே விராட் கோலி பௌண்டரி அடித்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட நடராஜன் பந்து வேகத்தை குறைத்து பவுலிங் செய்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசிய நடராஜன், பெங்களூரு அணியின் முக்கிய விக்கெட் ஆன டூ பிளசிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து பவர் பிளேவிலேயே 2 ஓவர்களை நடராஜன் பந்து வீசினார். நடராஜனின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்த பெங்களூர் அணி இரண்டு ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதை அடுத்து பதினெட்டாவது ஓவரில் பந்து வீசிய நடராஜன் பெங்களூர் அணிக்கு 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து கடைசி ஓவரில் பந்து வீசிய நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களில் பந்து வீசிய நடராஜன், மொத்தமாக 39 ரன்களை மட்டுமே கொடுத்து ரெண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தூள் கிளப்பினார்.
இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வாறு பவுலிங் நல்ல ஃபார்மில் இருக்கும் நடராஜனை இதுவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 2021 இல் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் எடுக்க ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தேர்வு செய்ய முடியவில்லை என்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு நடராஜன் இந்திய அணிக்கு கம் பேக் கொடுக்கவே இல்லை. தொடர்ச்சியாக டி என் பி எல், ராஞ்சி என பல்வேறு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த நடராஜன் பவுலிங்கில் ஃபார்முக்கு வர முடியாமல் தடுமாறினார். அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் மீண்டும் ஃபார்முக்கு வர முடியாமல் போனது. இப்படியான நிலையில் தான் நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது பவுலிங் திறமையை அனைவருக்கும் நிருபித்துக் காட்டியிருக்கிறார்.
நடராஜனின் அபாரமான பவுலிங் திறமையை பார்த்து வியந்து போன கிரிக்கெட் ரசிகர்கள், இந்த முறையாவது டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ரசிகர்கள் வலியுறுத்தி வந்தாலும், தமிழக வீரர் நடராஜனுக்கு இந்த முறையாவது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.எவ்வாறாயினும் வாய்ப்பு கிடைத்தால் தமிழக வீரர் நடராஜன் கண்டிப்பாக திறமையை நிரூபிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வரும் நடராஜனை திட்டமிட்டு கிரிக்கெட் போர்ட் புறக்கணித்து வரும் நிலையில், தமிழனா யார் என்று காட்டும் விதத்தில் நடப்பு ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் நடராஜன்.