இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஓப்பனர்களாக இறங்கினர். ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளேவில் 48 ரன்களை சிஎஸ்கே எடுத்தது. பவர்பிளேவுக்கு பின் ரச்சின் ரவீந்திரா 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் – சிவம் தூபே இணை 90 ரன்களை சேர்த்தனர். மிட்செல் சற்றே பொறுமையாக விளையாடினார். கடைசியாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.
தோனி கடைசி நான்கு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்து 20 ரன்கள் குவித்தார். தோனி களத்துக்கு வந்தாலே வெறி ஏறிப் போகும் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களால் மேலும் உற்சாகத்தில் கரை புரண்டனர். இதனால் வான்கடே மைதானமே சிஎஸ்கே அணியின் கோட்டையாக மாறியது. எங்கு பார்த்தாலும் சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷம் எழுந்தது. மொத்தத்தில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 206 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து 207 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா – இஷான் கிஷன் இணை சிறப்பான ஓப்பனிங்கை அளித்தனர். இந்த ஜோடி பவர்பிளேவில் 63 ரன்களை குவித்தது. அப்போதுதான் 8வது ஓவரை பதிரானா வீச வந்தார். வந்த முதல் பந்திலேயே இஷான் கிஷனின் விக்கெட்டை தூக்கினார். அதே ஓவரின் 3வது பந்தில் சூர்யகுமார் யாதவின் கேட்சை முஸ்தபிசுர் ரஹ்மான் பவுண்டரி லைனில் அற்புதமாக பிடித்து டக்கவுட்டாக்கினார். இது மும்பைக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி 60 ரன்களை குவித்த நிலையில், இந்த ஜோடியையும் பதிரானா தான் பிரித்தார். அவரின் 14வது ஓவரில் திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 16வது ஓவரில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 5 பந்துகளில் 13 ரன்களை அடித்திருந்தார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 30 ரன்களுக்கும் மேல் அடித்த ஷெபர்ட் இந்த போட்டியில் 1 ரன்னில் பதிரானா பந்துவீச்சில் டக்அவுட்டானார். அதன்பின், நபி களம் புகுந்து ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பதிரானா சிறப்பாக வீசினார். ரோஹித் கடைசி வரை போராடி சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த 20 ரன்கள் முக்கிய காரணமாக தோனியின் கடைசி மூன்று சிக்சர் பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் இந்த போட்டியின் போது முழங்காலில் வலியை சந்தித்த தோனி தொடர்ச்சியாக விளையாடுவாரா? அல்லது காயத்தினால் அவருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்த சந்தேகம் அனைவரது மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் தோனி காயத்தை பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை என்றும் அணியின் வெற்றி குறித்து மட்டுமே யோசித்து வருவதாக சென்னை அணியின் பௌலிங் கன்சல்டன்ட் எரிக் சிம்மன்ஸ் பேசியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “அவருடைய காயம் குறித்து அவரை விட மற்றவர்களே அதிகம் கவலையில் இருக்கிறோம். நான் பார்த்ததிலேயே அவர் கடினமான மனிதர். அவர் எந்த அளவுக்கு வலியில் இருக்கிறார் என எங்களுக்கு தெரியாது. அவர் அந்த வலியுடனே தனது பணியை செய்து வருகிறார். அவருக்கு நிச்சயம் வலி இருக்கிறது. ஆனால், அவர் அதை கண்டு கொள்ளாமல், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். ஆனால், நாம் தான் அவரது காயம் குறித்து அதிகம் கவலையில் இருக்கிறோம்” என்றார்