வெறும் 1 ரன் எடுத்தால் வெற்றி…இந்தியா பெற்ற த்ரில் வெற்றி… மறக்க முடியுமா இந்த தமிழனின் பந்து வீச்சை…

0
Follow on Google News

2024 ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இடங்களில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பல்வேறு தரமான வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற திரில் வெற்றி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அன்றைய போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

2012 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முக்கியமான நேரத்தில் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் வெற்றியின் போக்கை இந்திய அணியின் வசப்படுத்தினார் என்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை அடையச் செய்தது. ஆம் கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது. மேலும் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கௌதம் கம்பீர், விரேந்தர் சேவாக் கூட்டணி அடுத்தடுத்து சொற்ப ரண்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மூன்றாவதாக களம் இறங்கிய விராட் கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினார். இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய ரோகித் சர்மா 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் கணிசமாக உயரத் தொடங்கியது.

இந்த வரிசையில், ஐந்தாவதாக பேட்டிங் செய்ய வந்த யுவராஜ் சிங் 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த சுரேஷ் ரெய்னா 34 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அதிரடி காட்டியதால் ஸ்கோர் தொடர்ந்து உயர தொடங்கியது. கடைசியாக களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி 13 பந்துகளில் 23 ரண்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவ்வாறு நிதானமாக விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 152 ரண்களை எடுத்திருந்தது.

இதனால் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் ரண்களை எடுக்க முடியாமல் திணறியது. முதல் வரிசையில் களம் இறங்கிய காசிம் அம்லா 0, ஜேக் காலிஸ் 6, ஏ பி டி வில்லியர்ஸ் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பாஃப் டு ப்ளசிஸ் ஆறு பவுண்டரி 2 சிக்ஸர் அடித்து 65 ரண்களை விலாசினார்.

ஆனால் அடுத்ததாக களம் இறங்கிய ஜேபி டுமீனி, ராபின் பீட்டர்சன் ரன் எடுக்க முடியாமல் தடுமாறியதால் தென் ஆப்பிரிக்கா அணி பின்னடைவை சந்தித்தது.மேலும் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜியை நம்பி கடைசி ஓவரை ஒப்படைத்தார்.

பாலாஜி வீசிய முதல் பந்திலேயே தென் ஆப்பிரிக்கா சிக்ஸர் அடித்ததால், இந்திய அணி ரசிகர்கள் பீதி அடைந்தனர்.இருப்பினும் இரண்டாவது பந்திலேயே அல்பி மோர்கலை அவுட்டாக்கி நிம்மதியடயச் செய்தார். மேலும் அடுத்த பந்தில் ரன் ஏதும் கொடுக்க வில்லை. ஆனால், நான்காவது பந்தில் மோர்னே மோர்கல் சிக்சர் பறக்க விட்டார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 2 ரண்கள் மட்டுமே தென்னாப்பிரிக்க அணிக்கு தேவைப்பட்டது.

அந்த சமயத்தில் துல்லியமான பந்தை வீசிய பாலாஜி, ஒரு பந்து மீதம் வைத்து வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை த்ரில்லான வெற்றி பெற வைத்தார். ஆனால் அந்த ஆண்டு இந்திய அணியில் லீக் சுற்றுவுடன் தொடரில் இருந்து வெளியேறியது.