ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.ஏற்கனவே, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இம்பேக்ட் பிளேயர் ஆக மட்டுமே பயன்படுத்தி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் விளையாடவில்லை.மாறாக இம்பேக்ட் பிளேயர் பட்டியலிலேயே இருந்தார். இவ்வாறு தொடர்ந்து ரோகித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக மைதானத்தில் உட்கார வைத்திருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. மும்பை அணிக்குள் இன்னும் தொடரும் பிரச்சினை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படியான சூழலில், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் லக்னோ அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி அபாரமாக விளையாடி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. அதை அடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்து 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியிலும் சரி, இதற்கு முன்பாக நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி ரோகித் சர்மாவின் பெயர் இம்பேக்ட் பிளேயர் பட்டியலிலேயே உள்ளது. இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மாற்றம் செய்ததில் இருந்தே அந்த அணிக்குள் ஏராளமான பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.
ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு மட்டும் இன்றி அணியில் உள்ள சில வீரர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனாலேயே மும்பை பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. மும்பை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மாவை ஏன் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவரது அனுபவத்தை ஹர்திக் பாண்டியா பயன்படுத்திக் கொள்ளலாமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவின் மோசமாக ஃபீல்டிங் செய்து வந்தார். இது ஒரு காரணமாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியா மறைமுகமாக மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மாவை கழற்றி விடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரோகித் சர்மாவை இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்த்தால், அவருக்கு பதிலாக வேற பேட்ஸ்மேன் விளையாடுவார்.
அதுமட்டுமின்றி கடந்த ஆறு ஐபிஎல் சீசன் களிலும் ரோகித் சர்மா மோசமாக விளையாடி வருகிறார். இப்படியான நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலத்தின் போது மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை ரீடைன் செய்து விடக் கூடாது என்பதற்காகவே ஹர்திக் பாண்டியா திட்டமிட்டு இந்த வேலையை பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், மும்பை அணி ரசிகர்களின் கவனம் மொத்தமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மாவை ஓய்வறையில் அமர வைத்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.