இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் அஸ்வினுக்கு,.இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து சென்னை அணிக்கு அவரை அழைத்து வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது, ஐபிஎல் போட்டிக்கான ஏலம் எதுவும் நடைபெறவில்லை. ஆனாலும் சென்னை அணி நிர்வாகத்திற்குள் அஸ்வின் நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் மையம் சென்னையின் புறநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ளது. இனிமேல் இந்த மையத்தில் தான் சென்னை அணி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அந்த மையத்தின் தலைமை பொறுப்பை அஸ்வினுக்கு வழங்கி உள்ளது சென்னை அணி நிர்வாகம். எனவே அந்த மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, எந்த மாதிரியான பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது என அனைத்தையும் அஸ்வின் தான் தீர்மானிப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த மையம் முழுவதுமாக அஸ்வினும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை அணி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு அஸ்வினுக்கு வழங்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, விரைவில் நடைபெறவுக்கும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போதும் அஸ்வினை சென்னை அணி வாங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை அணி நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினி சென்னை அணியில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.
ஏலம் நடைபெறும் போது அன்றைய நிலவரத்தை பொருத்தே வீரர்களை தேர்ந்தெடுப்போம். இப்போது அவர் சென்னை அணியின் உயர் செயல்திறன் மையத்தில் முக்கிய பொறுப்பேற்க்கிறார். அந்த மையத்தின் அனைத்து செயல்பாடுகளும் கட்டுப்பாடுகளும் அவரது வசம் இருக்கும். இதற்காகவே அவரை நாங்கள் நியமித்து உள்ளோம்.இந்த முக்கிய பொறுப்பில் பதவி ஏற்றதன் மூலமாக இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக அஸ்வின் மாறி இருக்கிறார்.
அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அணியான DNCA முதல் டிவிஷன் அணிக்காக விளையாடுவார்” என்று கூறியுள்ளார். அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி வந்திருக்கிறார். அதன் பிறகு, தனது கிரிக்கெட் திறமையால் படிப்படியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
குறிப்பிட்ட காலம் இந்தியா சிமென்ஸ் நிறுவனத்தின் அணியில் விளையாடி வந்த அஸ்வின், 2016 ஆம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி அதன் போட்டி நிறுவனமான கெம்ப்லாஸ்ட் நிறுவனத்தில் இணைந்தார். மீண்டும் அடுத்த இரண்டு வருடங்களிலேயே அந்த அணியில் இருந்து விலகி 2018 ஆம் ஆண்டு டேக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் இணைந்து அந்த நிறுவனத்தின் டிஎன்பிஎல் அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார்.
இவ்வாறு பயணித்து வந்த அஸ்வின் தற்போது மீண்டும் தனக்கு முதல் வாய்ப்பு அளித்த இந்தியா சிமென்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி இருக்கிறார். இந்நிலையில், அஸ்வின் அடுத்த மூன்று ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவரா.? ஓய்வு பெறுவாரா.? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.