இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அதே போல ஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரராகவும் உலக சாதனை படைத்த அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவருடைய தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையே ரோஹித் சர்மா இந்தியாவை தலைமை தாங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை புதிய கேப்டனாக அறிவித்தது. மறுபுறம் கேப்டன்ஷிப் கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார்.
அது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த மும்பை ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது. அந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் அப்படிப்பட்ட கோட்பாட்டை கொண்ட அவரை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியா தலைமையிலான மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக இம்பேக்ட் வீரராக களமிறக்கியது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா இடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. ‘ஒரே குடும்பம்’ என்ற அடைமொழியை கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது, ‘இரண்டு குடும்பங்கள்’ இருக்கிறது. ஹர்திக் குடும்பம், ரோஹித் குடும்பம் என இரண்டு குடும்பங்கள் உள்ளன. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியில் மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், பீல்டர்களை செட் செய்வது போன்ற விஷயங்களில் அவர் சொதப்பலாகதான் செயல்பட்டு வருகிறார்.
மேலும் உடன் விளையாடும் சில சீனியர் வீரர்களுக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டதில் உடன்பாடு இல்லை. இந்நிலையில், 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. இது, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா 37 வயதினை எட்டிவிட்டதால், அடுத்த மெகா ஏலம் வரைக்கும் நல்ல பேட்டிங் ஃபார்முடன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் ரோகித் சர்மா மும்பை அணி அல்லாமல் வேறு அணியில் விளையாடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்தடுத்து அவமானப்படுத்திய மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறி அடுத்த வருடம் வேறு அணிக்காக விளையாடுவார் என்று ராயுடு, ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர்.
அந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. ஆனால் அப்போட்டி மழையால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. அப்போது கொல்கத்தா அணியின் உடைமாற்றும் அறைக்கு நேராக சென்ற ரோஹித் சர்மா அங்குள்ள வீரர்களுடன் மணிக்கணக்கில் அமர்ந்து பேசினார். அத்துடன் கொல்கத்தாவின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா களத்தில் நீண்ட நேரம் பேசினார். அதனால் அடுத்த வருடம் ரோகித் கொல்கத்தா அணியில் தான் விளையாடுவார் என்று அந்த மீட்டிங்கில் உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் பேசத் துவங்கினர்.