ஹீரோவாக நடிக்குமளவு சூரிக்கு திறமை உள்ளது என்பதை நிரூபித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியவர் வெற்றிமாறன். கடந்த ஆண்டு இதே கூட்டணியில் விடுதலை 1 வெளியாகியது. இதில், தனது திறமையான நடிப்பால் சூரி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இந்த திரைப்படத்தின் கதை களம் மிகவும் விறுவிறுப்பாக செல்ல, இளையராஜாவின் இசை படத்திற்கு பெருமளவில் கை கொடுத்தது. உரிமைகளுக்காக போராடும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ளார்.
பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசுரன் படத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்த பிறகு, மீண்டும் மஞ்சுவாரியர் அவரது இயக்கத்தில் நடிக்கும் படம் இதுவாகும். மஞ்சு வாரியரும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களின் உரிமைக்காக போராடும் விஜய் சேதுபதி மற்றும் அவரது குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் நடக்கும் மோதலே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது இந்த நிலையில் விடுதலை 2 படத்தின் முதல் விமர்சனம் தற்போது சென்சார் அதிகாரிகளிடம் இருந்து வந்துள்ளது. அண்மையில் விடுதலை 2 படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்தில் அதிக அளவில் ஆபாச வார்த்தைகளும் சர்ச்சைக்குரிய வசனங்களும் இருந்ததால் அந்த வசனங்களுக்கு மட்டும் ம்யூட் போட சொல்லி பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து விடுதலை 2 படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்தது. முதல் பாகத்தை விட இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருந்தாலும் இயக்குனர் வெற்றிமாறனை சென்சார் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறும் எனவும் பல காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருப்பதாகவும் சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
விடுதலை 2 டிரைலர் காட்சிகளில் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் பேசிய ‘வன்முறை எங்க மொழி இல்லை. ஆனா எங்களுக்கு அந்த மொழியை பேசத் தெரியும்’ மற்றும் ‘தத்துவம் இல்லா தலைவர்கள் ரசிகர்கள் மட்டும் தான் உருவாக்குவார்… அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது..’ என்ற அரசியல் வசனங்கள் பேசு பொருளாக அமைந்தது.
இந்த நிலையில் விடுதலை இரண்டாக பாகம் திரைக்கு வருவதற்கு முன்பு வெற்றி மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் படத்தின் 8 நிமிடக் காட்சிகளை “கட்” செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். திரைப்பட தணிக்கை குழு தற்போது படத்தில் இடம் பெற்று இருக்கும் அழுத்தமான அரசியல் வசன காட்சிகளை நீக்க முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி சாதியைக் குறிக்கும் சொற்கள், அரசியல் கட்சிகளைக் குறிக்கும் பெயர்களை நீக்க இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.விடுதலை 2 படத்திற்கு அதிகாலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.