3 நாளில் இத்தனை கோடி வசூலா..? சக்கைப்போடு போடும் வாழை படம்..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் தியேட்டர்கள்..!

0
Follow on Google News

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய வாழை படத்தை மாரி செல்வராஜின் மனைவி தயாரித்ததோடு, மாரி செல்வராஜின் சிறு வயதில் நடைபெற்ற மிகப்பெரிய துயரத்தை இந்தப் படத்தின் கதையாகக் கொண்டு இப்படத்தினை எடுத்துள்ளார். திரைப்பிரபலங்கள் தொடங்கி, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழை படத்தினை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 3 நாட்களிலேயே வசூல் மழையை கொட்டியுள்ளது. கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படமும் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்து கொண்டு இருந்தது. குறிப்பாக பாதவத்தி பாடல் ரிலீஸ் ஆனபோது பலரது மனதிலும் ரணத்தை உண்டாக்கும் விதமாக இருந்தது. இந்தப் பாடலை மாரி செல்வராஜே எழுதியிருந்தார். இப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

தன் சிறு வயதில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி கதையை கொண்டு சென்றுள்ள அவர் ஆடியன்ஸை இதன் மூலம் கண்கலங்க வைத்துள்ளார். குடும்ப கஷ்டத்தின் காரணமாக வேண்டா வெறுப்பாக வாழை காய்களை சுமந்து செல்லும் சிறுவனுக்கு அது பிடிக்கவில்லை. ஒரு நாள் அவன் காய் சுமக்க செல்லாமல் பள்ளிக்கு சென்று விடுகிறான். அதனால் ஏற்பட்ட சம்பவமும் விளைவுகளும் தான் படத்தின் கிளைமேக்ஸ். மனதை ரணமாக்க கூடிய வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதை தற்போது அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது.

கொஞ்சம் அதிகப்படியாக காட்சிகள் இருக்கிறதோ என்று நினைத்தாலும் இது ஏதோ ஒரு இடத்தில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. படம் முழுக்க முழுக்க மாரி செல்வராஜின் சிறுவயதை மைய்யமாகக் கொண்டது என்பதால், மாரி செல்வராஜ் எழுதிய புத்தகங்களான, மறக்கவே நினைக்கின்றேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் தற்போது வார இதழில் எழுதி வரும் சம்படி ஆட்டம் ஆகியவற்றை வாசிப்பவர்களுக்குத் வாழை படத்தின் மீது தனி எதிர்பார்ப்பே ஏற்பட்டது.

இவர்களில் பலர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டனர்.வாழை படத்தை பார்த்த இயக்குநர் பாலா மற்றும் சூரி மாரி செல்வராஜ்க்கு முத்தங்கள் கொடுத்து தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். நடிகர் தங்கதுரை அழுதுகொண்டே மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இயக்குநர் இமயம் எனப்படும் பாரதிராஜா மிகவும் பெருமையாக உள்ளது என மாரி செல்வராஜை பாராட்டியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், வாழை படத்தத்தைப் பார்த்தபின்னர், சென்னையில் உள்ள, மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று, அவரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை மாரி செல்வராஜே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படத்தில் நடித்திருந்த சிறுவர்களையும் பாராட்டியுள்ளார். அதேபோல் மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜின் தாயார், வாழை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்திருந்தனர்.

வாழை படம் கடந்த 23ஆம் தேதி ரிலீஸ்-ஆன நிலையில் முதல் நாளில் படம் ரூபாய் 1.15 கோடிகளும் இரண்டாவது நாளில் ரூபாய் 2.40 கோடிகளும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 3.55 கோடிகளை வசூல் செய்துள்ளது. மேலும் முதல் நாள் மக்களிடம் படம் பெரும் ஆதரவு பெற்றதால், இரண்டாவது நாளில் இருந்தே படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் படத்தின் வசூல் வரும் நாட்களிலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. வார இறுதி நாள் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.