திருந்தாத TTF வாசன்… தூக்கி ஜெயில்ல போடுங்க சார்…

0
Follow on Google News

Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். மேலும் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது, காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். பின் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்தது.

இதனையடுத்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி மூன்று வாரங்களுக்கு தினமும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரது யூடியூப் சேனைலை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து Immortal TTF Vasan என்கிற பெயரில் அவர் ஒரு புதிய யூடியூப் சேனலை தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றுள்ளார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவனக்குறைவாக செல்போனை பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்குதல்; அஜாக்கிரதையாக கார் ஓட்டியது; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், சென்னையில் வைத்து வாசனை கைது செய்த காவல்துறையினர், அவரை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை இயக்கியதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்துள்ள டிடிஎஃப் வாசன் இன்னும் திருந்தவில்லை, இவரை தூக்கி ஜெயில்ல போடுங்க சார் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.