கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். பைக்கில் சாகச பயணங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றி ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ளார். இவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக பல வழக்குகள் பதிவாகின. தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது. இதில் படு காயம் அடைந்த வாசன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட TTF வாசன் ஜாமீன் கோரிய நிலையில் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் மோட்டார் சைக்கிளை எரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் காட்டமாக கூறியது மட்டுமின்றி அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இறுதியாக கடந்த 1ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து 45 நாள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த டிடிஎஃப் வாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும் போது, “ பைக்தான் என்னுடைய லைஃப்பே. என்னுடைய பேஷனைத்தான் என்னுடைய தொழிலாகவே மாற்றி இருக்கிறேன். அதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தில் 10 வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பது நியாயமே இல்லாதது போல் இருக்கிறது.
இது என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல இருக்கிறது. ஆனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. என்னைப்பற்றி கொடுத்த புகாரே தவறாக இருக்கிறது. எனக்கு விபத்து ஏற்பட்ட உடனே நான் என்னுடைய சுயநினைவை இழந்து விட்டேன்.
ஆனால் புகாரில் புதிது, புதிதுதாக எழுதி இருக்கிறார்கள். சிறுவர்கள் என்னைப்பார்த்து பைக்கில் சாகசம் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. அவர்கள் கையில் ஏன் பைக்கை கொடுக்கிறீர்கள். இன்றைய தலைமுறையினர் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள். ஜெயிலில் எனக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய கைகோனையாக ஆகி விட்டது. மறுபடியும் நான் சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும்.
பல ஊடகங்களில் எனக்கு கை உடையவே இல்லை என்ற தகவல்கள் வந்தன. ஆனால் கை உண்மையாகவே உடைந்து இருக்கிறது. விபத்தில் கை போனதை விட ஓட்டுநர் உரிமம் போன போதுதான் மனம் வருந்தி, கண்கலங்கிட்டேன். தொடர்ந்து பைக் ஓட்டுவேன். சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருக்கிறது.” என்று TTF வாசன் பேசினார். இதற்கிடையே தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அதாவது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் வாகனத்தை ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளனர். அதாவது சொந்த நாட்டில் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் போது சர்வதேச ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும் என்பதே விதி என்பதால் அவரால் இனி இந்தியாவில் எங்கும் வாகனத்தை ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.