தக்லைஃப் படத்தின் கதை இது தான்… கமல் – திரிஷா இடையில் இருக்கும் உறவு …

0
Follow on Google News

கடந்த 1987ம் ஆண்டில் நாயகன் படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி, 37 ஆண்டுகளுக்கு பின் பின் கைகோர்த்த படம்தான் தக்லைஃப். இந்த படத்தில் சிம்பு முதன்முறையாக கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். திரிஷா அபிராமி நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களை படத்தில் ஏற்றிருக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இது நாயகன் படத்தின் 2ம் பாகமா என்று பலரும் சந்தேகித்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தக்லைஃப் படம் நாயகன் படத்தின் தொடர்ச்சி கிடையாது. நாயகன் படத்தின் சாயலே வராத அளவுக்கு இந்த படத்தை மிகவும் கவனமாக உருவாக்கி இருக்கிறோம் என்று உறுதியாக கூறியிருக்கிறார். வருகிற ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக்லைஃப் படத்தின் கதையை கமல்ஹாசன் எழுத மணிரத்னம் இயக்கி உள்ளார். படத்தின் முழுக்கதை என்னவென்று பார்க்கலாமா?

குற்றங்கள் செய்வதை மட்டுமே தனது வாழ்க்கையாக கொண்டவர் ரங்கராய சக்திவேல் நாயக்கராக நடித்துள்ள கமல்ஹாசன். மாபியா உலகில் கேங்ஸ்டர் ஆக வலம் வரும் ரங்கராய சக்திவேல் நாயக்கர் மற்றும் அவரின் சகோதரர் மாணிக்கம் இருவரையும் போலீசார் என்கவுண்டர் செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது அமரன் என்கிற சிறுவன் அவர்கள் இருவரது உயிரை காப்பாற்றுகிறான். எனவே அமரனை, ரங்கராய சக்திவேல் தனது மகனாக பாவித்து தத்தெடுத்து வளர்க்கிறார். அவர்தான் சிம்பு.

அமரன் பெரியவனாக வளரும்போது ரங்கராய சக்திவேல் அண்டர்வேர்ல்ட் தாதாவாக மாறி இருக்கிறார். தனது மனைவி அமிராமியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் ஒரு பெண்ணுடன் ரகசிய உறவிலும் இருந்து வருகிறார். அந்த பெண்தான் நடிகை திரிஷா. ரங்கராய சக்திவேல் தனது கேங்ஸ்டர் கும்பலுக்கு ஒரு கட்டத்தில் தனது வளர்ப்பு மகன் அமரனை தலைவனாக நியமிக்கிறார். எல்லா பொறுப்புகளும் அமரனிடம் வருகிறது.

மேலும் தனது வளர்ப்பு மகன் அமரன் மீது வைத்துள்ள அபரிமிதமான அன்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக தனது மகளையும் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரங்கராய சக்திவேல் நாயக்கர். ஆனால் ரங்கராய சக்திவேலின் முழு அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்கிற ஆசை அமரனுக்கு வருகிறது. ரங்கராய சக்திவேலின் தம்பி மாணிக்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு ரங்கரய சக்திவேலை கொலை செய்ய திட்டமிடுகிறார் அமரன்.

ரங்கராய சக்திவேலுவை கொன்று விட்டதாக அவர்கள் நம்பும் ஒரு சூழ்நிலையில் ரங்கராய சக்திவேல் அவர்களிடமிருந்து உயிர் தப்புகிறார். அந்த நேரத்தில் அமரன் முழு அண்டர்வேர்ல்டையும் கைப்பற்றி விடுகிறார். தன்னை கொலை செய்ய முயற்சி செய்தது அமரனே என சந்தேகிக்கும் ரங்கராய சக்திவேல் அவரையும் தனக்கு துரோகம் செய்த தம்பி மாணிக்கத்தையும் பழிவாங்க வருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் தக்லைஃப் படத்தின் கதையாக உள்ளது.

கதையின் ஓட்டத்தை பார்க்கும் போது ஒரு கட்டத்தில் சிம்புவை கமல் கொன்று விடுவது போல் கிளைமாக்ஸ் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் வில்லன் கேரக்டர் என்றாலே இறுதியில் கொல்லப்பட வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நியதி. தக்லைஃப் படத்தின் டிரெய்லர் காட்சிகளை பார்க்கும்போது அதில் வரும் அதிரடி சண்டை காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அதனால் ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய விருந்தாகவே இருக்கும் என்று நம்பலாம். அதேபோல் நடிகர் சிம்பு இதுவரை வேறொரு நடிகருக்கு வில்லனாக நடித்தது இல்லை. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக சிம்பு நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here