சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரும்பாலான திரையரங்குகளில் விக்ரம் நடித்த தங்கலான் படம் வெளியானது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி,.பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. ட்ரைலர் மிரட்டலாக இருந்ததால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இத்தகைய பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். வழக்கம்போல நடிகர் விக்ரம் கடுமையான உழைப்பை போட்டு கைதட்டல் வாங்கி வருகிறார். இருப்பினும் படம் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறுகிறார்கள்.குறிப்பாக படத்தில் இரண்டு விஷயங்கள் மட்டும்தான் பாராட்டத்தக்கது என்று சிலர் கூறுகின்றனர்.
முதல் விஷயம் விக்ரமின் நடிப்பு. விக்ரமை பொருத்தவரையில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமான கெட்டப்பில் தோன்றி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இதற்கு முன்னதாக விக்ரம் நடித்த பல்வேறு படங்களில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கடுமையான உழைப்பை போட்டு நடித்து இருப்பார். அதேபோல இந்த படத்திலும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
தங்கலான் பா ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் அருமையாக இருந்தாலும், இயக்குனர் திரைக்கதையில் சொதப்பிவிட்டதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
அதே சமயம் விக்ரமின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
விக்ரம் அவரது உடலை வருத்தி நடித்தது வீண் போகவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமின் நடிப்பு குறித்து அதிக அளவில் பேசி வருகின்றனர்.எனவே படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ள முதல் விஷயம் விக்ரமின் நடிப்பு. இரண்டாவது பாசிட்டிவான விஷயம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பிஜிஎம். படத்தின் திரைக்கதை ரசிகர்களை ஏமாற்றினாலும், ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமாக பொருந்தி இருக்கும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஒரு படத்திற்கு உயிரோட்டம் என்றால் பின்னணி இசைதான். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கொடுத்த பின்னணி இசை இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.அந்த அளவிற்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனித்துவமான பின்னணி இசையும், சிறப்பான பாடல்களையும் கொடுத்திருந்தார்.
அந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் கொடுத்த பின்னணி இசையைப் போலவே, தங்கலான் படத்திற்கான பிஜிஎம்மிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆக மொத்தம் விக்ரமின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசையும் தங்கலான் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று கூறலாம்.இவ்விரண்டு விஷயங்களும் படத்தில் பாசிட்டிவாக வந்திருக்கும் நிலையில், மற்றபடி படத்தில் பெரிதாக விஷயம் ஒன்றும் இல்லை என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.