கோலிவுட் சினிமாவில், சாதியை மையப்படுத்தி படம் எடுக்கும் டைரக்டர் என்று சொன்னாலே அது பா.ரஞ்சித் தான். இவர் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் சாதிய காட்சிகள் இருக்கும். குறிப்பாக, மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை என அனைத்து படங்களுமே சாதிய படங்களாகவும், ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரை பற்றிய படங்களாகத்தான் இருக்கும்.
இதனால் இவருக்கும், இவர் படங்களுக்கும், பல்வேறு தடங்கல்களும், சிக்கல்களும் வருவது வழக்கம் தான். அப்படி தான் தற்போது நடிகர் சியான் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கிய பா.ரஞ்சித், இப்படத்தின் பிரமோசனின் போது வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தீண்டாமை பற்றி பேசி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் பா.ரஞ்சித்தின் இந்த பேச்சை கேட்ட பலரும், தங்கலான் படத்தை நாங்கள் புறக்கணித்து வருவதும், படத்தை பார்க்க மாட்டோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விக்ரமின் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கலான் படம் வெளியாகியுள்ளது. இந்த படமும் பா.ரஞ்சித்தின் அதே அக்மார்க் கதையான, ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் முன்னேற்றத்திற்காக அந்த கூட்டத்தைச் சேர்ந்த தலைவர் பாடுபடுவது தான். இந்த கான்செப்டில் தான் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பிருந்த எதிர்பார்ப்புகள், தற்போது படம் ரிலீசான பின்பு இல்லை.
ஏனெனில் படத்தின் முதல் ஷோ முடிந்ததுமே இந்த படத்திற்கான நெகட்டிவ் ரிவ்யூஸ் அதிக அளவு வரத் தொடங்கிவிட்டது. குறிப்பாக கதை நன்றாக இல்லை, படம் புரியவில்லை, அவர்கள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை, பா.ரஞ்சித்தின் கெரியரிலேயே மோசமான படம் இது என அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் நடிகர் சியான் விக்ரம், அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், படத்தின் கதை சரியில்லாததால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தான், ஒரு படத்தின் இயக்குனரே தனது படத்தை காலி செய்வதை எங்காவது பார்த்திருப்போமா, ஆனால் பா.ரஞ்சித் செய்வார் என கூறிவருகின்றனர். ஏனெனில் தற்போது அவர் தீண்டாமை பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாரி செல்வராஜ் உடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் பா. ரஞ்சித், பேப்பர் கப்பும் நவீன தீண்டாமை தான் என பேசியுள்ளார்.
டீ டம்ளரில் சாதிய பாகுபாடு இருப்பதை பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமேக்ஸில் காட்டி , மாரி செல்வராஜ் அந்த படத்தை கவனிக்க வைத்தார். இந்நிலையில், அதுதொடர்பாக பேசிய பா. ரஞ்சித் பேப்பர் கப்பும் தீண்டாமையின் வெளிப்பாடு தான் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேப்பர் கப்பில் டீ குடிக்கிறது கூட தீண்டாமை தான். தீண்டாமை இப்போது நவீனமாங மாறிவிட்டது.
தனித்தனி டீ கிளாஸில் இருந்த தீண்டாமை, இப்போது பேப்பர் கப்புக்கு மாறிவிட்டது. அதில் குடித்துவிட்டு அதை அப்படியே தூக்கி போட்டுவிடலாம். யாரும் மீண்டும் அதில் குடிக்க வேண்டியதில்லை. இப்படி தீண்டாமை வேற ஒரு வடிவமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்களில் சிலர் பேப்பர் கப் சுகாதாரமானவை தானே? இன்னொருத்தர் குடித்த எச்சில் கிளாஸில் தான் டீ குடிக்க வேண்டுமா என கேட்டு அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் எப்போதும், எல்லாவற்றிலும் சாதி, தீண்டாமை என பேசிக்கொண்டே இருக்கக்கூடாது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர். அதேபோல் தான் சினிமா விமர்சகரான புளூ சட்டை மாறனும், நீங்கள் காபி/டீ சாப்பிடும் கடைகளில் உங்கள் விருப்பப்படி கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் தருகிறார்களா அல்லது ஜாதி பார்த்து தருகிறார்களா? என்கிற கேள்வியை எழுப்பி பா.ரஞ்சித்தின் பேச்சை கலாய்த்துள்ளார்.
மேலும் சாதி பார்த்து யாரும் பேப்பர் கப் தரவில்லை என்றும், பா. ரஞ்சித்துக்கு எப்போதும் அதே நினைப்பு தான் என்றும் விளாசியிருந்தார். இந்நிலையில் தான் இவரின் சாதிய பாகுபாடு படங்களை மக்கள் கொண்டாடுவதால் தான், இவர் அனைத்திலும் சர்ச்சையை கிளப்பி வருகிறார். அதனால் இவரின் படத்தை புறக்கணித்து விடுவோம் என பலரும் தங்கலான் படத்தை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் தான் தவளை தன் வாயால் கெடும் என்பது போல், பா.ரஞ்சித் அவர் வாயாலையே அவர் படத்திற்கு ஆப்பு வைத்துவிட்டார்.