தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகின்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடித்திராத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்தவர். சிவாஜி கணேசனின் நடிப்பை உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து தந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
ஆனால் தொடர்ந்து நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டு வரும் அவமானங்களை,தமிழ் சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அனைவருமே கண்டும் காணாமல் வாய் மூடி அமைதியாக இருப்பது சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் சிலையை வைத்து தொடர்ந்து நடந்து வரும் அரசியல், அதனால் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டு வரும் அவமானங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த பின்பு அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை சென்றது. ஆனால் இதற்கு ஜெயலலிதா செவி சாய்க்கவில்லை. அதன் பின்பு முதல்வராக கருணாநிதி, அவருடைய நண்பர் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தார். ஆனால் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வந்த பின்பு அரசியல் காரணங்களுக்காக கருணாநிதி அமைத்த அந்த சிலையை அகற்றுவதற்கு பல வகையில் முயற்சி செய்தார்.
மெரினா கடற்கரையில் இருக்கும் காந்தி சிலையை சிவாஜி கணேசன் சிலை மறைப்பதாக ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி வழக்கு பதிவு செய்கின்றார். ரசிகர் மருதுமோகன் என்பவர் சிவாஜி கணேசன் சிலை இருக்கும் இடத்திலிருந்து பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து இதில் எங்கே சிவாஜி கணேசன் சிலை காந்தி சிலையை மறைக்கிறது என்கின்ற ஒரு தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இருந்தும் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவதில் மும்மூரம் காட்டி வந்த அரசாங்கம் சிவாஜி கணேசன் சிலை அமைந்த பின்பு அந்த இடத்தில் அதிக விபத்துக்கள் நடந்து வருகின்றது என்கின்ற ஒரு குற்றசாட்டு எழுந்தது. ஆனால் சிவாஜி கணேசன் சிலை அமைப்பதற்கு முன்பும், அமைத்த பின்பும் அந்த இடத்தில் எத்தனை விபத்துகள் நடந்தது என்கின்ற கணக்கை ஒரு சிவாஜி ரசிகர் எடுத்தார். அதில் சிவாஜி கணேசன் சிலை அமைப்பதற்கு முன்பும் பின்பும் விபத்துகளில் பெரிய மாற்றமும் இல்லை.
இருந்தும் அரசியல் காரணங்களுக்காக சிவாஜி கணேசன் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பல வருடங்களாக மூட்டை கட்டி அருங்காட்சியத்தில் அமைக்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை சினிமா துறையினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது திருச்சியில் அரங்கேறியுள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் கே என் நேரு அவர்கள் ஏற்பாட்டில் திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஒரு சிலை அமைக்க அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிலை தற்போது வரை சாக்கு பைகளால் மூடப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு காரணம் கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற அதிமுக ஆட்சி தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி வந்து இரண்டு வருடங்கள் நெருங்க இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் கருணாநித மகன் முதல்வராக பதவி ஏற்ற பின்பும் கூட திருச்சியில் இருக்கும் சிவாஜிகணேசன் சிலைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தொடர்ந்து சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டு வந்த அவமானத்தை கண்டும் காணாமல் வாய்மூடி அமைதியாக இருக்கையில்.
திருச்சி சிவாஜி சிலை விவகாரம் சீமான் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து பொங்கி எழுந்த சீமான் வருகின்ற சிவாஜிகணேசன் பிறந்தநாளுக்குள் திருச்சியில் உள்ள சிவாஜி கணேசன் சிலை திறக்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நானே திறந்து வைப்பேன் என்கின்ற ஒரு முழக்கத்தை வெளியிட்டுள்ளார். இதனால் திருச்சியில் சாக்கு பைகளால் மூடப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது என சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.